லேபிள்கள்

7.5.15

பி.இ.,இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை: டிப்ளமோ ஆறு பருவ தேர்வு கணக்கீடு

"பி.இ.,பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு கடந்த ஆண்டுகளில், டிப்ளமோ படிப்பின் ஐந்து மற்றும் ஆறாம் பருவ தேர்வு மட்டுமே கணக்கிடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஒன்று முதல் ஆறு பருவ தேர்வு முடிவு மதிப்பெண் அடிப்படையிலேயே ரேங்க் பட்டியல் வெளியிடப்படும்” என இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை செயலாளர் மாலா தெரிவித்தார்.
டிப்ளமோ மற்றும் பி.எஸ்.சி., முடித்தவர்கள் பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேருவதற்கான விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் 34 மையங்களில், வருகிற 13 முதல் அடுத்த மாதம் (ஜூன்) 9ம் தேதி வரை வழங்கப்படுகிறது. இதற்கான கவுன்சிலிங் காரைக்குடி அழகப்ப செட்டியார் இன்ஜி.,கல்லூரியில் ஜூன் கடைசி வாரத்தில் தொடங்கி, ஜூலை 2வது வாரத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் உள்ள 500க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து, ஒரு லட்சம் இடங்கள் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டன. 28 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே சேர்ந்தனர். இந்த ஆண்டு 630 கல்லூரிகள் உள்ளதால் 1.25 லட்சம் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக 35 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.

நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை செயலர் மாலா கூறியதாவது: விண்ணப்பங்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும். கடந்த ஆண்டுகளில் டிப்ளமோ படிப்பின் கடைசி ஐந்து, ஆறு பருவ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு மாணவர்கள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டனர். இந்த ஆண்டு முதல் அனைத்து பருவ தேர்வு முடிவுகளையும் கணக்கில் கொண்டு, ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். எனவே மாணவர்கள் விண்ணப்பத்தை அனுப்பும் போது, அவர்களது ஆறு பருவ தேர்வு முடிவுகளின் சான்று நகலை அனுப்ப வேண்டும். விண்ணப்பம் அளிக்க கடைசி நாள் ஜூன் 13ம் தேதி.விண்ணப்பங்களை செயலர், நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை, அழகப்ப செட்டியார் இன்ஜி., கல்லூரி, காரைக்குடி என்ற முகவரிக்கு தபாலிலோ, நேரிலோ அனுப்பலாம். பி.எஸ்.சி.,கணிதம்,கணிதத்தை துணை பாடமாக எடுத்தவர்கள் மட்டுமே கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டனர். இந்த ஆண்டு பிளஸ் 2வில் கணித பாடம் படித்தவர்கள், பி.எஸ்.சி.,யில் தாவரவியல், விலங்கியல் எடுத்திருந்தாலும் அவர்களும் விண்ணப்பிக்கலாம். அதுமட்டுமன்றி, கடந்த ஆண்டு அவர்கள் கவுன்சிலிங்கிற்கு முதலில் அழைக்கப்பட்டனர். இதனால் அவர்களுக்கு 900 இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு கிடைத்தது. இந்த ஆண்டு, அவர்களுக்கு டிப்ளமோ மாணவர்களுக்கு பிறகு, கடைசியில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. எனவே கூடுதல் இடங்கள் கிடைக்கும். திருநங்கைகளும் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு ஆண், பெண் இருபாலர் பயிலும் கல்லூரியில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும். சான்றிதழ் நகல்களில் அரசு அலுவலர் சான்று ஒப்பம் தேவையில்லை. மாணவரின் சுய சான்றொப்பமே போதும். இணையதள முகவரி www.accet.edu.com என மாற்றம் செய்யப்பட்டுள்ளது, என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக