லேபிள்கள்

7.5.15

பி.இ. சுரங்கவியல் துறையில் மாணவிகளைச் சேர்க்க அண்ணா பல்கலைக் கழகம் முடிவு

பி.இ. சுரங்கவியல் துறையில் முதல் முறையாக மாணவிகளைச் சேர்க்க அண்ணா பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியது:-

பி.இ. சுரங்கவியல் படிப்பு அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்தப் படிப்பில் 30 இடங்கள் உள்ளன. இதில் இதுவரை மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டு வந்தனர். ஏனெனில், சுரங்கச் சட்டம் 1952-இன் படி, சுரங்கத்துக்குள் பெண்களை பணியில் அமர்த்தக் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், பூமிக்கு மேற்பகுதியில் நடைபெறும் சுரங்கம் தொடர்பான பணிகளில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலான நேரத்தில் மட்டுமே பெண்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோல் சுரங்க நடைமுறைகள் 1957 பிரிவு 86(2)-இன் படி, குகைபோன்ற அமைப்பில் நடைபெறும் சுரங்கப் பணியில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண் ஊழியர்களின் துணை இல்லாமல் பெண் ஊழியரை பணியமர்த்தக் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் காரணமாக, பி.இ. சுரங்கவியல் படிப்பில் இதுவரை மாணவிகள் சேர்க்கப்படாமல் இருந்தனர்.


இந்த நிலையில், வரும் கல்வியாண்டு முதல் இந்தப் படிப்பிலும் மாணவிகளைச் சேர்க்க பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது. கலந்தாய்வு அறிவிப்பின் மாணவர் விவரங்களில், இதுதொடர்பான தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக