லேபிள்கள்

5.6.14

அங்கீகாரம் பெறாத 36 'ஏ' பள்ளி குழந்தைகளை சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர்க்க தமிழக அரசுக்கு உத்தரவு

சென்னையில் உள்ள செட்டிநாடு அறக்கட்டளை நடத்திய 36 "ஏ' பள்ளி மாணவர்களை அருகில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட சிபிஎஸ்இ பாடப்பிரிவு பள்ளிகளில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த பி.கிரிதரன் உள்பட 15 பேர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: நாங்கள் எங்களது குழந்தைகளை செட்டிநாடு அறக்கட்டளையின் கீழ் செயல்பட்ட 'ஏ' பள்ளியில் அனுமதித்தோம்.

அந்தப் பள்ளிகள் மாநில அரசு மற்றும் மத்திய பாடப்பிரிவுகளின் அங்கீகாரம் இல்லாமல் தொடங்கப்பட்டது. மேலும், அந்தப் பள்ளிகளில் போதிய வசதிகள், கட்டமைப்புகள் ஆகியவை இல்லை. ஆனால், அந்தப் பள்ளி நிர்வாகம் எங்களிடம் இருந்து அதிகமான கட்டணத்தை வசூலித்தன.

பள்ளி கட்டணம் தொடர்பாக எங்களிடம் தெளிவாக எதையும் தெரிவிக்கவில்லை. கட்டண நிர்ணயக் குழுவும் இது தொடர்பாக கட்டணத் தொகையை நிர்ணயிக்கவில்லை.

இது குறித்து எங்களுக்குத் தெரிய வந்தவுடன் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுக்கு தொடர்ந்து மனு அளித்தோம். போலீஸாரும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தற்போது செட்டிநாடு அறக்கட்டளையின் கீழ் செயல்பட்ட 'ஏ' பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர்ப்பதற்கு அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், எங்களுக்கு நஷ்டஈடாக ரூபாய் இரண்டு லட்சமும், நாங்கள் செலுத்திய கட்டணத்தை திரும்ப எங்களிடம் வழங்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.சத்யநாராயணன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு நடந்தது. பள்ளி கல்வித் துறை சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், செட்டிநாடு அறக்கட்டளை நிர்வாகம் மாநில அரசு அல்லது சிபிஎஸ்இ-யிடம் அனுமதி அல்லது அங்கீகாரம் பெறாமலே "ஏ' பள்ளிகளை தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு தனியார் பள்ளிகளை முறைப்படுத்தும் சட்டம் 1973-ன் கீழ், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து அனுமதி பெறாமல் தனியார் பள்ளியைத் தொடங்க முடியாது. மனுதாரர்கள் செட்டிநாடு அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ் செயல்படாமல் உள்ள 'ஏ' பள்ளிகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவும், நஷ்டஈடு வழங்கவும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

36 'ஏ' பள்ளிகளை இயக்கிய செட்டிநாடு அறக்கட்டளைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கடந்த 2011-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28-ஆம் தேதி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அங்கீகாரம் பெறமால் பள்ளி நடத்தியது தொடர்பாக விளக்கம் கேட்டும் ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

தற்போதைய வழக்கு போன்ற மற்றொரு வழக்கில் தனி நீதிபதி விரிவாக விசாரணை செய்து உத்தரவிட்டுள்ளார். எனவே, செட்டிநாடு அறக்கட்டளை நிர்வாகம் நடத்திய ஏ பள்ளிகளில் படித்த குழந்தைகள் அனைவரையும், அவர்களின் வீட்டு அருகே உள்ள அங்கீகரிக்கப்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.

அந்த குழந்தைகளின் மாற்றுச் சான்றிதழ்களை செட்டிநாடு அறக்கட்டளை நிர்வாகம் சம்பாந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்க வேண்டும்.

மேலும், 'ஏ' பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இடைக்கால நிவாரணைத் தொகையாக ரூ.15 ஆயிரத்தை நான்கு வாரங்களுக்குள் செட்டிநாடு அறக்கட்டளை நிர்வாகம் வழங்க வேண்டும்.


குழந்தைகளின் பெற்றோர்கள் திரும்பப் பெற வேண்டிய கட்டணம், இழப்பீட்டுத் தொகையை பெற சம்பந்தப்பட்ட அமைப்பிடம் முறையிடலாம் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக