ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஒரு மாணவர் கூட வராத துவக்கப்பள்ளியை, தலைமை ஆசிரியை திறந்து வைத்து காத்திருந்தார்.
திருவாடானை ஒன்றியத்தில் அரசு ஆரம்பப்பள்ளிகள் 84, நடுநிலைப்பள்ளிகள் 19 உள்ளன. சில ஆண்டுகளாகவே கீழக்கோட்டை, அறிவித்தி, கிளியூர் உட்பட சில பள்ளிகளில் ஐந்திற்கும் குறைவான எண்ணிக்கையில் மாணவ, மாணவிகள் படித்து வந்தனர். இதில், கிளியூர் அரசு துவக்கப்பள்ளியில், கடந்தாண்டு ஒரு மாணவி மட்டும் படித்து வந்தார்.
இந்தாண்டு அவர் 6ம் வகுப்பு படிக்க, வேறு பள்ளிக்கு சென்று விட்டார். நேற்று கிளியூர் பள்ளி திறக்கப்பட்டபோது, ஒரு மாணவர் கூட பள்ளிக்கு வரவில்லை. தலைமை ஆசிரியை சத்யா மட்டும், மாலை வரை இருந்தார். தலைமை ஆசிரியை கூறுகையில், "இந்த கிராமத்தில் 100 குடும்பங்கள் உள்ளன. 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் என கணக்கிட்டால் 5 பேர் மட்டுமே உள்ளனர். நன்றாக பாடம் நடத்தியும் இங்கு யாரும் குழந்தைகளை சேர்க்க மறுக்கின்றனர்,” என்றார். உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அண்ணாதுரை கூறுகையில், "அரசு பள்ளிகளில் கல்வி, தரமாக உள்ளது. ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை ஊர்வலம் நடத்தி, ஆசிரியர்கள் வீடு,வீடாக சென்று ஆங்கில கல்வி பாடத்திட்டம் நடத்துவது குறித்து விளக்கியும் பயன் இல்லை. கிளியூர் பள்ளி இன்னும் சில நாட்களில் மூடப்படும். அங்குள்ள ஆசிரியர், வேறு பள்ளிக்கு மாற்றம் செய்யப்படுவார்,” என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக