லேபிள்கள்

3.6.14

பள்ளி திறந்த முதல் நாளே சோகம்: தலைமை ஆசிரியை தாக்கி மாணவி காயம்

ராமநாதபுரம் அருகே பள்ளி திறந்த முதல் நாளில், தலைமை ஆசிரியை தாக்கியதில் எட்டாம் வகுப்பு மாணவி காயமடைந்தார்.
ராமநாதபுரம் அருகேயுள்ளது, மண்டபம் ஒன்றியம் குயவன்குடி நடுநிலைப்பள்ளி. இங்கு எட்டாம் வகுப்பு மாணவி ஜனனி. பள்ளி துவங்கிய முதல் நாளான நேற்று மதியம் அறிவியல் ஆசிரியை ஹாத்துன் ஷரீபா, ஜனனியை வருகைப்பதிவேடு எடுத்து வருமாறு கூறினார். ஆசிரியர்கள் ஓய்வறைக்கு சென்ற ஜனனியின் இடது கண் அருகே ரத்தக்காயம் இருந்தது. அது பற்றி மாணவியிடம், தலைமை ஆசிரியை வளர்மதி விசாரித்தார். 'சில நாட்களுக்கு முன் வீட்டு அடுப்பிலிருந்து கொதிக்கும் பாலை, இறக்கிய வைத்தபோது சிதறி, கண் அருகே விழுந்ததில் காயம் ஏற்பட்டது' என்றார். மதிய உணவு இடைவேளைக்கு பின் பள்ளிக்கு வந்த மாணவி ஜனனியின் உறவினர் சிகாமணி, 'ஓய்வறையில் இருந்த ஆசிரியர்களிடம், 'எனது அண்ணன் மகளை, நீங்கள் ஏன் மனம் புண்படும்படியாக பேசினீர்கள்' என கேட்டார். இது தொடர்பாக ஆசிரியர்களுக்கும், சிகாமணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வேலை நேரத்தில் ஆசிரியைகளிடம், சிகாமணி, மது போதையில் வந்து தகராறில் ஈடுபட்டதாக ஆசிரியர் பாலசுப்ரமணியன், கேணிக்கரை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

ஜனனி கூறுகையில்,' வருகைப்பதிவேடு எடுக்கச் சென்றபோது, ஆசிரியைகளுக்கு இடையே சண்டை நடந்தது. அப்போது உள்ளே சென்ற என் மீது, பால் கொட்டி காயமடைந்த இடத்தில், தலைமை ஆசிரியை தாக்கினார்,' என்றார்.


தலைமை ஆசிரியை வளர்மதி கூறுகையில்,' ஜனனி நன்றாக படிக்கும் மாணவி என்பதால், அவரது உடல் நலம் விசாரித்தேன். நான் தாக்கியதாக பொய் சொல்கிறார். அவரது உறவினர் மது போதையில், ஓய்வறைக்குள் புகுந்து ஆசிரியைகளிடம் ஆபாசமாக கூறி, தாக்க முயன்றார். எந்த ஒரு மாணவரையும், ஆசிரியர்கள் அடிப்பதே இல்லை' என்றார். இது தொடர்பாக மாணவி ஜனனி, தலைமை ஆசிரியை வளர்மதி உள்ளிட்ட ஆசிரியர்கள் கேணிக்கரை போலீசில் தனித்தனி புகார் கொடுத்தனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக