வேலூர் மாவட்டத்தில் அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஜூன் 5ம் தேதி முதல் இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கப்படும்’ என்று முதன்மை கல்வி அலுவலர் சுப்பிரமணி தெரிவித்தார்.
மாணவர்கள் ரத்த சோகை, மாணவிகள் பருவம் அடைதல், மாதவிலக்கு மற்றும் மகப்பேற்றின்போது பெண்கள் உடல் ரீதியான பிரச்னைகளை சந்திக்கின்றனர். சோர்வு மற்றும் கவனக்குறைவு போன்ற பிரச்னைகளால் படிப்பிலும் கவனம் குறையும்.
இதனால் வாரம்தோறும் இரும்புச்சத்துள்ள உணவுகளை எடுத்து கொள்வதன் மூலம் இந்த பாதிப்புகள் தவிர்க்கப்படுகிறது. இந்த குறைபாட்டை சரி செய்வதற்காக நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் சுமார் 13 கோடி மாணவர்களுக்கு இந்தாண்டு இரும்பு சத்து மாத்திரைகள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டில் பெண் குழந்தைகளுக்கு மட்டும் ரத்தசோகை பாதிப்பு இருப்பதாக கணக்கில் கொண்டு இத்திட்டம் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்திய அளவில் வளர் இளம் பருவத்தில் பெண்கள் 56 சதவீதமும், ஆண்கள் 30 சதவீதமும் ரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் வரும் கல்வியாண்டில் மாணவர்களுக்கும் இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. யுனிசெப் மூலம் இத்திட்டத்தை நடப்பு கல்வியாண்டில் செயல்படுத்துகின்றனர். இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுப்பிரமணி கூறியதாவது:
வேலூர் மாவட்டத்தில் 22 ஒன்றியங்களில் 1,628 தொடக்க பள்ளிகளும், 509 நடுநிலை பள்ளிகளும், 197 உயர்நிலை பள்ளிகளும், 208 மேல்நிலை பள்ளிகளும் உள்ளன. இப்பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஜூன் 5ம் தேதி முதல் இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக