திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள செவலூரில் அரசு ஆதி திராவிடர் நல நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 120 மாணவர்கள் படிக்கின்றனர். ஆனால் இப்பள்ளிக்கு தலைமை ஆசிரியரே இல்லை. 3 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களில் ஒருவர் தலைமை ஆசிரியர் பொறுப்பை கவனித்து வந்தார்.
இந்நிலையில் இந்த வருடம் முதல் இப்பள்ளி உயர் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் கூடுதலாக 9, 10–ம் வகுப்புகள் செயல்படுகின்றன. இப்பள்ளியில் 8–ம் வகுப்பு முடித்த மாணவர்கள் 9–ம் வகுப்பிற்கு வேறு பள்ளிகளுக்கு செல்லாமல் இப்பள்ளியிலேயே சேர்ந்துள்ளனர்.
ஆனால் கூடுதல் வகுப்புகளுக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படாததுடன் ஏற்கனவே தலைமை ஆசிரியர் பொறுப்பு வகித்த ஆசிரியரும் விடுமுறையில் உள்ளதால் பள்ளிக்கு வரவில்லை. இதனால் 2 ஆசிரியர்களுடன் மட்டுமே பள்ளி திறக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் இன்று காலை பள்ளியை திறக்க விடாமல் மாணவர்களுடன் பள்ளி முன்பு மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மறியலில் ஈடுபட்ட பெற்றோர்கள் கூறியதாவது:-
கடந்த 6 மாதங்களுக்கு முன்பே இப்பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க கோரி போராட்டம் நடத்தினோம். ஆனால் நியமிக்கவில்லை. மேலும் தற்போது கூடுதலாக 2 வகுப்புகள் துவக்கப்பட்டு அந்த வகுப்புகளுக்கும் ஆசிரியர் நியமிக்கப்பட வில்லை. முக்கியமாக தலைமை ஆசிரியர் கூட இல்லை.
இப்படி ஆசிரியர்களே இல்லாமல் எங்கள் பிள்ளைகள் இந்த பள்ளிக்கு வந்து என்ன செய்வார்கள். பள்ளியை மட்டும் திறந்து வைத்து விட்டால் போதுமா? ஆசிரியர்கள் வர வேண்டாமா? எங்கள் பிள்ளைகள் இந்த பள்ளியில் படிக்க வேண்டும் என்றால் உடனடியாக ஆசிரியர்களை அரசு நியமிக்க வேண்டும். இல்லாவிட்டால் எல்லோருக்கும் டி.சி.யை வாங்கி வேறு பள்ளியில் சேர்க்க உள்ளோம் என்றனர்.
தனியார் பள்ளிகளின் அசூர வளர்ச்சியால் ஏழை மக்களின் ஒரே நம்பிக்கையான அரசு பள்ளிகள் தேய்பிறையாகி வரும் நிலையில் பள்ளி கல்வி துறையின் அலட்சிய போக்கால் இருக்கும் பள்ளிகளையும் மூடும் அவல நிலை தொடர்ந்து வருகிறது. தொடர்ந்து இந்த நிலை நீடித்தால் ஏழை மக்கள் கல்வி கற்பது என்பது வெறும் கனவாகவே போய் விடும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக