லேபிள்கள்

2.6.14

ஊருக்கு ஒரு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி

மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிப் பேருந்துகள் ஓ(ட்)டத் தகுதியானவைதானா என்று அண்மையில் ஜரூராகச் சோதனை நடைபெற்றது. இதற்காக, அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் ஒவ்வொரு பள்ளியாகச் சென்று ஆய்வு செய்ததாகவும், தகுதியற்ற நிலையில் இருந்த வாகனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது நல்ல விஷயம்தானே என்று தோன்றினாலும், மிகவும் தாமதமான நடவடிக்கையோ என்ற ஐயமும் ஏற்படுகிறது.

பள்ளி இறுதித் தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறையும் முடிந்து இன்னும் ஒரு சில நாள்களிலேயே பள்ளிகள் திறக்கவிருக்கின்ற சூழ்நிலையில் பல பள்ளிப் பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படுவதென்பது (தகுந்த காரணம்தான் என்றாலும்) சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு, இதற்கான மாற்று ஏற்பாடு செய்து கொள்வதற்கான வாய்ப்பையும் கால அவகாசத்தை குறைக்கிறது.

இதே ஆய்வுகள் சுமார் ஒரு மாத காலம் முன்பாகவே, அதாவது பள்ளி இறுதித் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை தொடங்கிய உடனே மேற்கொள்ளப்பட்டிருந்தால், தவறுகளைக் களைவதற்கான வாய்ப்பும் நேரமும் கிடைத்திருக்கும். சோதனை நடவடிக்கைகளின் நோக்கமும் நிறைவேறியிருக்கும்.

இத்தகைய கடைசி நேர நடவடிக்கைகள், பள்ளி மாணவர்களின் பயணக்கஷ்டங்களை அதிகரிப்பதாகத்தான் முடியும்.

தனியார் பள்ளி மாணவர்கள் ஆயிரக்கணக்கில் பணம் கட்டிப் பயணிக்கும் வாகனங்களைப் பற்றி மட்டுமின்றி, ஏழை எளிய மாணவர்கள் வெகுவாக நம்பியிருக்கும் அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் பராமரிப்பு இவற்றைப் பற்றியும் இந்த நேரத்தில் அக்கறை காட்டப்பட வேண்டும்.

பள்ளி நேர நெரிசல்களை ஒட்டி, பள்ளிக்கூடங்கள் தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களை மாற்றியமைப்பது போன்ற நடவடிக்கைகள் ஓரளவு பலன் தந்த போதிலும், மாணவப் பயணிகளின் எண்ணிக்கை வருடா வருடம் அதிகரிக்கின்ற யதார்த்தத்தைக் கருத்தில் கொண்டு, அந்தந்த பயணப்பாதைகளுக்கான (ரூட்) நகரப் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பது அவசியம். இது மட்டுமன்று சிற்றூர்களில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இல்லாத காரணத்தினால், பக்கத்தில் உள்ள பெரிய ஊருக்கு தினந்தோறும் பயணித்து மாலையில் வீடு திரும்ப வேண்டிய பரிதாப நிலையில் உள்ள கிராமத்து மாணவ மாணவிகளையும் கணக்கில் கொண்டு, போதிய அளவில் பேருந்துகளை இயக்குவது அவசியம்.

அண்மையில் வெளிவந்த பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் சரி, பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் சரி, ஒரு முக்கியமான விஷயத்தை நிரூபித்துக் காட்டிவிட்டன.

சென்னை முதலிய பெருநகரங்களில், அதிலும் உயர்தரமான தனியார் பள்ளிகளில் படிப்பவர்கள் மட்டுமே அதிக மதிப்பெண்களையும், குறிப்பாக மாநில அளவிலான (ரேங்க்) தரத்தையும் பெறமுடியும் என்பது மாறி, கடைக்கோடி ஊர்களிலுள்ள மாணவர்களும் சிறப்பான தேர்ச்சியைப் பெறமுடிகின்ற நிலை தோன்றி விட்டது.

தேர்ச்சி அளவும், பெறுகின்ற மதிப்பெண்களும் வருடா வருடம் மாநிலம் முழுவதும் உயர்ந்து வருவதையே இத்தேர்வு முடிவுகள் சந்தேகத்திற்கிடமின்றி எடுத்துக் காட்டுகின்றன. ஆசிரியப் பெருமக்களின் ஈடுபாடு, மாணவ மாணவிகளின் உழைப்பு இரண்டும் சேர்ந்தால் கார்ப்பரேஷன்-பஞ்சாயத்துப் பள்ளி மாணவர்கள்கூட இமாலய வெற்றி பெற முடியும் என்பதும், தனியார் பள்ளிகளை சரணடையத் தேவையில்லை என்பதும் மீண்டும் ஒரு முறை நிறுவப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், நமது மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளின் தரத்தைத் தொடர்ந்து உயர்த்தியும், மூலை முடுக்குகளில் உள்ள கிராமத்து மாணவர்கள் பேருந்தில் ஏறிப் பயணம் செய்ய அவசியமின்றி, அவரவர் ஊர்களுக்கு அருகிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலை - மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி உதவி புரிந்திட வேண்டும்.


அரசுப் பள்ளி, தனியார் பள்ளி மாணாக்கர்கள் யாராயினும் தங்கள் பொன்னான நேரத்தினைப் பேருந்துப் பயணத்தில் செலவிட்டு, வாடி வதங்கி வீடு திரும்பிவிடாமல், அவரவர் வீட்டின் அருகிலுள்ள பள்ளியில் பயிலும் நிலையை உருவாக்கினால் நாடு நலம் பெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக