மெட்ரிக் பள்ளிகளில் தமிழில் 2 பாடங்களை கட்டாயம் நடத்த வேண்டும் என்கிற அரசு உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், வரும் 10ம் தேதி அரசு பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாடு மெட்ரிக்குலேஷன் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாச்சல பாண்டியன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு கல்வி சட்டம் 2006ன் படி மெட்ரிகுலேஷன் பள்ளிகளில், மூன்று பாடங்களில் இரண்டு பாடத்தை தமிழ் வழியில் போதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு கொண்டு வந்த இந்த சட்டம் அடுத்த ஆண்டு, அதாவது 20152016ம் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக, கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதி, அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவு சட்டவிரோதமானது. இதை ரத்து செய்ய வேண்டும்.
மேலும், இந்த சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். வழக்கமாக தமிழை, ஒரு பாடமாக வைத்துள்ளோம். இதுதவிர அறிவியல், சமூகவியல், கணிதம் ஆகிய 3 பாடங்களில் ஏதாவது 2 பாடத்தை தமிழில் கற்பிக்க வேண்டும் என்று அரசு கட்டாயப்படுத்தி, அனைத்து மெட்ரிக் பள்ளிகளுக்கும் சுற்றிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது பள்ளி நிர்வாகத்தினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. ஏற்கனவே, சமச்சீர் கல்வியை அமல்படுத்தியதால் தனியார் பள்ளிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. மாணவர்களும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தற்போது தமிழில் 2 பாடத்தை கற்பிக்கவேண்டும் என்று அரசு உத்தரவிடுவது மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் நோக்கமே பாழ்பட்டுவிடும். கல்வி தரம் அதிகமான அளவு பாதிக்கப்படும். எனவே நீதிமன்றம் இதை கருத்தில் கொண்டு அரசு உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி ராஜேந்திரன் விசாரித்து, வரும் 10ம் தேதி, தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.ஐகோர்ட்டின் இந்த உத்தரவையடுத்து தமிழக அரசு சார்பில் 10ம் தேதி பதில் அளிப்பதற்கான அறிக்கை தயாரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக