லேபிள்கள்

3.6.14

அரசு பள்ளிகளில் கல்வி தொடர மாணவர்களை வலியுறுத்துங்கள்! தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு

மாற்றுச்சான்றிதழ் பெற வரும் அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களை, அரசு மேல்நிலை பள்ளிகளிலே கல்வி தொடர, தலைமையாசிரியர்கள் எடுத்துக்கூற வேண்டுமென, அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில், 1,090 அரசு துவக்கப்பள்ளிகள், 307 நடுநிலைபள்ளிகள் உள்ளன. இதில், படித்த மாணவர்களுக்கு, தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து, மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி நடக்கிறது. கோடை விடுமுறை முடிந்து, நேற்று பள்ளிகள் துவக்கப்பட்டதால், பெரும்பாலான மாணவர்கள், உயர்கல்வி தொடர, மாற்று சான்றிதழ் பெறவும், சேர்க்கைக்காகவும் குவிந்தனர். இதன்படி, அரசு பள்ளிகளில் அடிப்படை கல்வி முடித்த மாணவர்கள், மேற்படிப்புக்கு மீண்டும் அருகிலுள்ள அரசு பள்ளிகளிலே சேர, தலைமையாசிரியர்கள் அறிவுறுத்த வேண்டுமென, அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது நடந்து முடிந்த, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளி மாணவர்களும், மதிப்பெண், தேர்ச்சி விகிதம் என, போட்டி போட்டுக் கொண்டு முன்னிலை வகித்துள்ளனர். இதை எடுத்துக்கூறி, அரசு பள்ளிகளில் சேர்க்கையை அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இருந்து, வெளியேறும் மாணவர்களை குறி வைத்து, அரசு பள்ளிகளில் சேர்க்கும் பணி மும்முரப்படுத்தப்பட்டுள்ளது.


முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறுகையில்,''தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளிகளில், மாணவர்களின் கற்றல் திறனை அதிகப்படுத்த, பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. இது, நடந்து முடிந்த, அரசு பொதுத்தேர்வில் எதிரொலித்தது. இதை எடுத்துக்கூறி, அரசு பள்ளி மாணவர்களை முழுமையாக, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் சேர்க்க, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவிர, பெற்றோர்கள் மத்தியில் அரசு பள்ளி மீதான கருத்து மாறுபட்டுள்ளதால், மேல்நிலை பள்ளிகளில், இந்தாண்டு மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக