லேபிள்கள்

8.6.14

தமிழை ஒரு பாடமாக கற்பிக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு

தமிழ்நாடு தமிழ் கற்கும் சட்டம் 2006-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி ஒன்றாம் வகுப்பு முதல் பகுதி-1ல் தமிழை ஒரு மொழிப் பாடமாகக் கற்பிப்பது கட்டாயமாகும். இதன்படி 2013-14-ம் கல்வியாண்டு வரை தமிழை ஒரு பாடமாகக் கற்பிப்பது 8-ம் வகுப்பு வரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2015-16-ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பில் பகுதி-1-ல் தமிழை மொழிப் பாடமாகக் கட்டாயம் கற்பிப்பது தொடர்பாக தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குநர் கடந்த 10.2.2014 அன்று ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
2015-16-ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுபவர்கள் பகுதி-1ல் தமிழ் மொழிப் பாடத்தில் மட்டுமே தேர்வு எழுத இயலும் என்று இயக்குநர் கூறியுள்ளார்.
இதனை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.கே.வெங்கடாசல பாண்டியன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தற்போது மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மொழிப் பாடங்களைத் தவிர மற்ற அனைத்து பாடங்களும் ஆங்கில மொழியில் கற்பிக்கப்படுகின்றன. மொழிப் பாடங்களைப் பொருத்தமட்டில் தமிழ், இந்தி, ஜெர்மன், பிரெஞ்சு போன்ற பாடங்களை தேர்ந்தெடுத்துப் படிக்க மாணவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
எங்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள பெரும்பாலான பள்ளிகளின் மாணவர்கள் தமிழ் அல்லாத மொழியை பாடமாக எடுத்துப் பயின்று வருகின்றனர். இந்நிலையில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரின் உத்தரவால் அந்த மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும், தமிழை ஒரு பாடமாக கற்பிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது கல்வி நிறுவனங்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக உள்ளது.
ஆகவே, கடந்த பிப்ரவரி 10-ம் தேதி மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளவற்றை செயல்படுத்த இடைக்காலத் தடை விதிப்பதோடு, அதனை ரத்து செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி பி.ராஜேந்திரன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த மனு தொடர்பாக அரசுத் தரப்பில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் செவ்வாய்க் கிழமைக்கு (ஜூன் 10) ஒத்தி வைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக