லேபிள்கள்

9.6.14

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இனி வானமே எல்லை: வருகிறது 'நடமாடும் ஆலோசனை மையம்!'

அரசு பள்ளி மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி, வாழ்க்கையிலும் வெற்றி இலக்கை எட்டும் வகையில் ஆலோசனை வழங்க, வரும் 16ம் தேதி முதல்'நடமாடும் ஆலோசனை மையம்' உடுமலையில் செயல்படதுவங்குகிறது. பள்ளி மாணவர்களின் குடும்ப சூழ்நிலை, அவர்களை சுற்றியுள்ள சமூகப் பிரச்னைகள், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான இடைவெளி ஆகியவற்றால், மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். இதன் வெளிப்பாடு சமூகத்தின் மீதும், பள்ளியின் மீதும் வெறுப்பை ஏற்படுத்துகிறது. 
மனதளவில் பாதிக்கப்படும் மாணவர்கள் தங்கள் பிரச்னைகளை வெளிப்படுத்த இயலாத போது, கல்வியில் மட்டுமின்றி, எதிர்கால வாழ்க்கையிலும் தோல்வி நிலைக்கு ஆளாகின்றனர். சிலர் தற்கொலை போன்ற முடிவுகளை எடுக்கின்றனர். 
இதனை தடுக்க, மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்த்து, மனநிலையை பக்குவப்படுத்த தமிழக பள்ளிக் கல்வித்துறை மூலம், 'நடமாடும் ஆலோசனை மையம்' உருவாக்கப்பட்டுள்ளது. 
இம்மையத்தில், மனோதத்துவ ஆலோசனை நிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமான நிகழ்வுகளை காண்பிக்க, 'டிவி.,' இருக்கை வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய இந்த ஆலோசனை மையம், மாணவர்களிடம் வரவேற்பை பெற்றது. கடந்த ஆண்டு சென்னை உள்ளிட்டட சில மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்கள், இம்மையத்தால் பயன் பெற்றனர். 
திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுப்பகுதி பள்ளிகளிலும், இந்த நடமாடும் ஆலோசனை மையத்தால், மாணவர்கள் பயன்பெற வேண்டும் என, உடுமலை அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இந்த கல்வியாண்டில், உடுமலை பள்ளிகளுக்கும் நடமாடும் ஆலோசனை மையத்தை வரவழைக்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உடுமலையில் 136 அரசு துவக்க, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், பல ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். மாணவர்களின் கல்வித்தரம் சில பள்ளிகளில் நலிவடைந்து வரும் நிலையில் இதுபோன்ற ஆலோசனை மாணவர்களுக்கு அவசியம் என பெற்றோர் தரப்பிலும் எதிர்பார்க்கிறது. 
அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை, ஆசிரியர்களிடம் தெரிவிப்பதில்லை. ஒழுக்கம், பிறருக்கு உதவும் பண்பு, சுயசிந்தனை போன்ற பண்புகளை, மாணவர்களுக்கு புகட்டுவதிலும் பள்ளிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. 
இதனை மறந்துவிட்டு மதிப்பெண் ஒன்றை மட்டுமே இலக்காக கொண்டுள்ள நமது பள்ளிகளின் மத்தியில், மாணவர்கள் தங்களின் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனை அகற்ற மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை கட்டாயம் தேவை. 
தங்களின் திறமைகளை வெளிப்படுத்த தயங்கும் மாணவர்களுக்கு இதுபோன்ற ஆலோசனைகள் பயனுள்ளதாக இருக்கும். 
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
கோவை மண்டல உளவியல் நிபுணர் அருள்வடிவு கூறுகையில், ''நாளை (இன்று) முதல், கோவை, நீலகிரி பகுதிகளில் நடமாடும் ஆலோசனை மையம் செயல்பட துவங்குகிறது.
16ம் தேதி முதல் உடுமலை
பகுதி பள்ளி மாணவர்களை ஆய்வு செய்ய இருக்கிறோம்,'' என்றார். 
'ஆசிரியருக்கும் ஆலோசனை'
''கடந்தாண்டு செயல்படுத்தப்பட்ட நடமாடும் ஆலோசனை மையத்தினால் பல பள்ளிகள் நன்மை அடைந்தன. மாவட்ட அளவில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்தது. இம்முறை, ஆசிரியர்களுக்கும் உளவியல் ஆலோசனை வழங்க திட்டமிட்டுள்ளோம்.

மாணவர்களை கையாள்வது, கற்றல் குறைபாடுள்ள மாணவர்களை கண்டறிவது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் ஆலோசனைகளும், சில உளவியல் சம்பந்தமான பயிற்சிகளும் வழங்கப்படும்,'' என்றார் அருள்வடிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக