தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள, 2,172 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, 27,907 பேர் போட்டியிடுகின்றனர். கடந்த ஆண்டை விட, விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை, வெகுவாக குறைந்துள்ளது.
தமிழகத்தில், 19 அரசு மருத்துவக் கல்லூரிகளும், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரியும் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள் போக, 2,172 எம்.பி.பி.எஸ்., இடங்களும், 85 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன. சுயநிதி கல்லூரிகள், மாநிலத்திற்கு ஒதுக்கும் இடங்களுக்கும் சேர்த்து, கலந்தாய்வு மூலம், மாணவர் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கு, விண்ணப்பம் பெற்ற, 30,380 பேரில், 27,907 பேர், விண்ணப்பங்களை சமர்ப்பித்து உள்ளனர். அரசு கல்லூரிகளில் கட்டணம் குறைவு என்பதால், அதில் உள்ள, 2,172 இடங்களுக்கு, 27,907 பேர் போட்டியில் உள்ளனர். இவர்களுக்கான, 'ரேண்டம்' எண், சமீபத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. குறைந்தது ஏன்: கடந்த ஆண்டில், 32,052 பேர் விண்ணப்பங்கள் பெற்று, 29,050 பேர் சமர்பித்து இருந்தனர். கடந்த ஆண்டை விட, இப்போது, விண்ணப்பம் வாங்கியோர், விண்ணப்பித்தோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. விண்ணப்பித்தோர் 1,143 ஆககுறைந்துள்ளது. எம்.பி.பி.எஸ்., படிப்புக்களில் சேர மாணவர்கள், தனியார் கல்லூரிகளுக்கு முட்டி மோதும் நிலையில், விண்ணப்பம் குறைந்தது ஏன் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
இதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது: நடப்பு ஆண்டில், பிளஸ் 2 தேர்வில், ஏராளமானோர் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். முக்கிய பாடங்களில், 'சென்டம்' எடுத்தோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால், 'கட் ஆப்' கடந்த ஆண்டை விட, ஒரு மதிப்பெண் கூடும் நிலை உள்ளது. இந்த சூழலில், மதிப்பெண் குறைவாக உள்ளோர், விண்ணப்பித்து காத்திருப்பது தேவையில்லை. இதுகுறித்து, மாணவர்களிடம் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. எனவே தான், சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மற்றபடி, மாணவர்களிடம் ஆர்வம் குறைந்தது என்று, கூற முடியாது, என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக