லேபிள்கள்

13.6.14

பள்ளிகளுக்கு 'ஜெனரேட்டர்' செலவுத் தொகை:'போக்கு காட்டும்' கல்வித் துறை

அரசு பொதுத் தேர்வுகளின் போது மின்தடையை சமாளிக்க தேர்வு மையங்களில் 'ஜெனரேட்டர்கள்' வசதி செய்த வகையில் பள்ளிகளுக்கு ஏற்பட்ட செலவுத் தொகையை வழங்காமல், கல்வித் துறை இரு ஆண்டுகளாக இழுத்தடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் 2011-12ல் மின்தடை பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. அப்போது நடந்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மின்தடை நீடித்தால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற சர்ச்சை எழுந்தது.பொதுத் தேர்வுகளுக்கு முன் நடந்த செய்முறை தேர்வுகளில் ஏற்பட்ட மின்தடை மாணவர்களை வாட்டி வதைத்தது. இதனால் கிராமங்களில் அமைந்துள்ள பல பள்ளி தேர்வு மையங்களில், அரசு அறிவித்த நேரத்தில் அல்லாமல், மின்சாரம் இருக்கும் நேரத்திற்கு செய்முறை தேர்வுகள் மாற்றி நடத்தப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்தது.

இது, பொதுத் தேர்வுகளிலும் ஏற்படக் கூடாது என்பதற்காக தேர்வு மையங்களில் 'ஜெனரேட்டர்' வசதி ஏற்படுத்த, அப்போது இருந்த கல்வி அதிகாரிகள் பள்ளிகளுக்கு உத்தரவிட்டனர்.பிளஸ் 2 தேர்வு 11 நாட்களும், பத்தாம் வகுப்பு தேர்வுகள் குறைந்தது 7 நாட்களும் நடந்த வகையில், ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் 'ஜெனரேட்டர்' வசதி செய்தது, அதற்கு டீசல் என தலா 20 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஏற்பட்டது.அப்போது அரசு, உதவி பெறும், மாநகராட்சி, தனியார் பள்ளிகள் என 2,500க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.

இந்த செலவுத் தொகை தேர்வு மையப் பொறுப்பாளர்களான தலைமை ஆசிரியர்கள் 'தலையில்' தான் விழுந்தது.இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் கல்வித் துறைக்கு தொடர்ந்து எழுதிய கடிதங்களால், 'ஜெனரேட்டர்' செலவுத் தொகைக்கான ரசீதுகளை அனுப்பி வைக்க அதிகாரிகள் அறிவுறுத்தினர். பள்ளிகள் எழுதி அனுப்பி இரு ஆண்டுகள் கடந்த நிலையிலும், இன்னும் அந்த செலவுத் தொகை வழங்கவில்லை.தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழக மதுரை மாவட்ட தலைவர் பசீர் அகமது கான் கூறுகையில், ''மின்தடையால் மாணவர்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காக பள்ளிகளில் 'ஜெனரேட்டர்' வசதி செய்யப்பட்டது. அதற்கான செலவுத் தொகையை கல்வித் துறை வழங்குவதாக கூறி, 2 ஆண்டுகள் சென்ற நிலையிலும், அது கிடைப்பதற்கான அறிகுறி கூட இல்லை. இனிமேலாவது இத்தொகையை வழங்க வேண்டும்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக