லேபிள்கள்

9.6.14

410 மருத்துவ இடங்களுக்கு மாணவர் சேர்க்கையில் சிக்கல்: அரசு மருத்துவ கல்லூரிகளில் போதிய வசதியில்லை?

: 'அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்களுக்கு ஏற்ப, போதிய வசதிகள் இல்லை' என, இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளதால், 410 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, மாணவர்களை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
தமிழகத்தில், 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில், 2,550 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இதில், மத்திய அரசு ஒதுக்கீடு இடங்கள், 15 சதவீதம் போக, மீதமுள்ள, 2,172 இடங்களுக்கு, கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கப்பட உள்ளனர்.


கால அவகாசம்:


இந்த நிலையில், கடந்த ஆண்டில், அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு கூடுதலாக தரப்பட்ட, 410 இடங்களில், மாணவர் சேர்க்கை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.

போதிய வசதிகள் இல்லை:


கூடுதல் இடங்களாக, கடந்த ஆண்டு, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி - 100; சென்னை - 85; சேலம் - 25; திருச்சி - 50; தூத்துக்குடி - 50 என, ஒதுக்கப்பட்டன. இது தவிர, புதிதாக, திருவண்ணாமலை அரசு மருத்துக் கல்லூரிக்கு, 100 இடங்களுக்கு அனுமதி தரப்பட்டு, மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். கூடுதல் இடங்கள் அனுமதித்த கல்லூரிகளில், போதிய வசதிகள் உள்ளதா என, ஐந்து ஆண்டுகளுக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்து, ஆண்டுதோறும் அனுமதி அளிக்கும். அதன்படி, இந்த ஆண்டுக்கான ஆய்வு நடந்து முடிந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, 'ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில், போதிய வசதிகள் இல்லை' எனக்கூறி, கூடுதல் இடங்களுக்கு அனுமதி தர மறுக்கப்பட்டுள்ளது. இதே போல், திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரிக்கும் சிக்கல் வந்துள்ளது. பிற கல்லூரிகளின் ஆய்வு முடிவுகள் இன்னும் வரவில்லை. எனவே, கூடுதலாக, 410 இடங்களுக்கு மாணவர்களை சேர்ப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதுதவிர, 2012ல், 100 இடங்களுடன் துவக்கப்பட்ட சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில், போதிய வசதி இல்லை என, அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளதால், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.


இதுகுறித்து, மருத்துவக்கல்வி இயக்குனர் கீதாலட்சுமி கூறுகையில், ''ஸ்டான்லி உள்ளிட்ட சில மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு செய்த இந்திய மருத்துவ கவுன்சில், சில குறைபாடுகளை சுட்டிக்காட்டியது. அவற்றை நிவர்த்தி செய்து, அறிக்கை அனுப்பி விட்டோம். விரைவில் உரிய அனுமதி கிடைத்துவிடும். சிவகங்கை மருத்துவக் கல்லூரிக்கும் உரிய அனுமதி கிடைக்கும். இதில் எந்த சந்தேகமும் தேவையில்லை,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக