மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, அரசுப்பள்ளிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளை துவக்கலாம் என்ற யோசனையை ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தங்களது குழந்தைகள் ஆங்கில வழிக்கல்வியில் பயில வேண்டும் என்ற ஆர்வம் பெற்றோர் இடையே அதிகரித்ததால், கடந்த 10 ஆண்டுகளாக, அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை படிப்படியாக குறையத் துவங்கியது. தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. இலவச பாடப்புத்தகம், நோட்டு, சீருடை, கல்வி உதவித்தொகை என சலுகை திட்டங்களை அரசு செயல்படுத்தியும், மாணவர் சேர்க்கை எதிர்பார்த்தபடி நடக்கவில்லை.தனியார் பள்ளிகளில், மூன்று அல்லது நான்கு வயதிலேயே குழந்தையை, ப்ரீ கே.ஜி., அல்லது எல்.கே.ஜி., வகுப்பில் சேர்த்து விடுகின்றனர். அதன்பின், அரசு பள்ளியில் சேர்க்க ஆர்வமின்றி, தனியார் பள்ளியிலேயே குழந்தையின் படிப்பு தொடர்கிறது.
ஆறாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு அல்லது பிளஸ் 1 வகுப்பு களில், அரசு பள்ளியிலோ அல்லது அரசு உதவி பெறும் பள்ளியிலோ சேர்க்க பெற்றோர் முன்வருகின்றனர். அதிலும், பொருளாதார வசதியற்ற ஒரு தரப்பினர் மட்டுமே, இவ்வாறு செய்கின்றனர். மற்றவர்கள், பிளஸ் 2 வரை தனியார் பள்ளியிலேயே குழந்தைகளை படிக்க வைக்கின்றனர். தனியார் பள்ளிகளை போல, அரசு பள்ளிகளையும் பெற்றோர் தேடி வரும் வகையில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கச் செய்யும் முயற்சியாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆங்கில வழிக்கல்வி துவங்கப்பட்டது. இதனால், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஓரளவு அதிகரித்தபோதும், எதிர்பார்த்த அளவுக்கு பெற்றோர் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதற்கு மாற்றாக, அரசு துவக்கப்பள்ளிகளில், முதல் வகுப்புக்கு முன்னதாக, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளை துவக்கலாம் என்ற யோசனை, ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளை கவனித்து, பராமரிக்க, அரசு சார்பில் அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. பெரும்பாலான மையங்களில், போதிய எண்ணிக்கையில் குழந்தைகள் இருப்பதில்லை; அம்மையங்களும் முறையாக செயல்படுவதும் இல்லை. அங்கன்வாடி மையங்களை, அரசு துவக்கப்பள்ளிகளுடன் இணைத்து, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளாக மாற்றி செயல்படுத்தினால், மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது, என, ஆசிரியர்கள் தரப்பில் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக