தமிழகம் முழுவதும் கல்வித்துறை அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வந்த 500க்கும் மேற்பட்ட நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. மீறி செயல்படும் பள்ளிகளை கண்டறிந்து ஒரு நாளுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 55 ஆயிரம் அரசு பள்ளிகளும், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் மெட்ரிக், சுயநிதி, நர்சரி பள்ளிகள் செயல்படுகிறது. இது மட்டுமின்றி மாநிலம் முழுவதும் தெருவுக்கு தெரு பிளே ஸ்கூல், நர்சரி என்ற பெயரில் உரிய அனுமதியில்லாமல் ஏராளமான பள்ளிகள் செயல்படுகின்றன. பள்ளிகளில் பின்பற்றவேண்டிய அடிப்படை விதிகளும் இங்கு மீறப்படுகின்றன. இத்தகைய பள்ளிகளை அவ்வப்போது கண்டறிந்து பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்கிறது. ஆனாலும் தொடர்ந்து புற்றீசல் போல் பள்ளிகள் தொடங்குவது அதிகரிக்கிறது. நடப்பு கல்வியாண்டில் அனுமதியின்றி செயல்படும் பள்ளிகள், அனுமதியை புதுப்பிக்காத பள்ளிகளை கண்டறிந்து மூடுவதற்கு மாவட்டம் தோறும் தொடக்க கல்வித்துறை நிர்வாக அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அனுமதி இல்லாத பள்ளிகளை கடந்த ஜூலை 31ம் தேதிக்குள் மூடவேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதன்படி சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் மட்டும் 500க்கும் மேற்பட்ட பள்ளிகள் இருப்பது கண்டறியப்பட்டு மூடுவதற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
ஜூலை 31ம் தேதிக்கு பின்னர் தொடர்ந்து செயல்படும் பள்ளிகளை கண்டறிந்து அவற்றுக்கு விதிமீறல் நோட்டீஸ் வழங்கி ரூ. ஒரு லட்சம் அபராதம் வசூலிக்கவேண்டும். அதோடு செயல்பட்ட நாட்களை கணக்கில் எடுத்து ஒரு நாளுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் வசூலிக்கவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பள்ளி தாளாளர் மீது சட்டரீதியான நடவடிக்கைக்கும் பரிந்துரை செய்யப்படும். மேலும் மூடப்பட்ட பள்ளிகளில் பயிலும் குழந்தைகளை அருகில் உள்ள வேறு பள்ளியில் சேர்க்கவும் அதிகாரிகள் நேரடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் தோறும் மூடப்பட்ட பள்ளிகள் குறித்த விவரங்களை 4ம் தேதி(நாளை) அறிக்கையாக தொடக்க கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 27 நர்சரி அண்ட் பிரைமரி பள்ளிகள் கண்டறிந்து மூடுவதற்கு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உஷா உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் எருமபட்டி, பேளூக்குறிச்சி, திருச்செங்கோடு, வெண்ணந்தூர், நாமக்கல் ஆகிய இடங்களில் அங்கீகாரம் இன்றி இயங்கிய தலா ஒரு பள்ளிகள் வீதம் 5 பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாத 9 நர்சரி அண்ட் பிரைமரி பள்ளிகளை மூட இதுவரை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு நர்சரி அண்ட் பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைபள்ளிகள் சங்க பொதுச்செயலாளர் நந்தகுமார் கூறுகையில், ‘‘முதலில் தனியார் பள்ளிகள் செயல்பாட்டுக்கு தகுந்த விதிமுறைகளை வகுக்க வேண்டும். பள்ளிகள் அனைத்தையும் ஒழுங்குபடுத்த தவறிவிட்டு, வேண்டுமென்றே கல்வித்துறை அதிகாரிகள் நர்சரி அண்ட் பிரைமரி பள்ளிகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்த சூழ்நிலை நிலவி வருகிறது. உடனடியாக இவ்விவகாரத்தில் அரசு ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும், என்றார்.
5ம் தேதி முதல்கள ஆய்வு
தொடக்க கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநிலம் முழுவதும் சென்னை நீங்கலாக மற்ற பகுதிகளில் சுமார் 500 பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான பள்ளிகள் இதுவரை மூடவில்லை. அங்கு படித்து வரும் குழந்தைகளை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்கும் நடவடிக்கை இந்த வாரம் தொடங்குகிறது. இதற்கான கள ஆய்வு வரும் 5ம் தேதி முதல் மேற்கொள்ளப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக