தமிழகத்தில், 15 சதவீத அரசு பள்ளிகளில், அதாவது, 5,720 அரசு பள்ளிகளில், கழிப்பறை வசதிகள் இல்லை' என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த, 5,720ல், 1,442 பள்ளிகள், பெண்கள் பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.
இணையதளத்தில்... : நாடு முழுவதும், மாநில வாரியாக, அதில், ஒவ்வொரு மாவட்ட வாரியாக உள்ள அரசு பள்ளிகள் எண்ணிக்கை, அதில், எத்தனை ஆண்கள் அரசு பள்ளிகளில், கழிப்பறை வசதி இல்லை; எத்தனை அரசு பெண்கள் பள்ளிகளில், கழிப்பறை வசதி இல்லை என்ற புள்ளி விவரங்கள், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதளத்தில், வெளியிடப்பட்டு உள்ளன. அதில், தமிழகத்தில், மொத்தம் உள்ள, 37,002 அரசு பள்ளிகளில், 1,442 பெண்கள் பள்ளிகளிலும், 4,278 ஆண்கள் பள்ளிகளிலும், கழிப்பறை வசதி இல்லை என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரூ.17 ஆயிரம் கோடி : இதன்படி, மொத்த அரசுப்பள்ளி களில், 15.45 சதவீத பள்ளிகளில், கழிப்பறை வசதி இல்லை என்பது, குறிப்பிடத்தக்கது. கடந்த, 2013 - 14ல், எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில், இந்த தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. பள்ளிக்கல்வித் துறைக்கு, நடப்பாண்டில், 17 ஆயிரம் கோடி ரூபாய், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டுகளிலும், அதிகஅளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இருந்தும், அரசு பள்ளிகளில், அடிப்படையான கழிப்பறை வசதியே, முழுமையான அளவிற்கு நிறைவேற்றப்படவில்லை என்பது, மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரம் மூலம் உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. கடந்த, ஜூலை 30ம் தேதி, சட்ட சபையில், 110வது விதியின் கீழ், முதல்வர் ஜெயலலிதா, ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
எது சரி? : அதில், 'அனைத்துப் பள்ளிகளிலும், 100 சதவீதம் கழிப்பறை வசதி மற்றும் குடிநீர் வசதி இருக்க வேண்டும் என்பதற்காக, கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், கழிப்பறை வசதிகள் இல்லாத, 2,057 பள்ளிகளுக்கு, கழிப்பறை வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது' என, முதல்வர் தெரிவித்தார். ஆனால், மத்திய அரசு அறிக்கை யில், கழிப்பறை வசதி இல்லாத, 5,720 பள்ளிகள் என, குறிப்பிடப்பட்டு உள்ளது. இதில், எந்த புள்ளி விவரம் சரியானவை என, தெரியவில்லை.
கல்வி துறை கருத்து என்ன? : கல்வித் துறை வட்டாரம் தெரிவித்த கருத்து: பட்ஜெட்டில், அதிக நிதி ஒதுக்கப்படுவதாக தெரிந்தாலும், 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிதி, சம்பளத்திற்கே செலவாகி விடு கிறது. மீதமுள்ள நிதி, மாணவர்களுக்கான இலவச திட்டங்களுக்கு போய்விடுகிறது. ஆர்.எம்.எஸ்.ஏ., (மத்திய இடை நிலைக் கல்வி திட்டம்) மற்றும் எஸ்.எஸ்.ஏ., (அனைவருக்கும் கல்வி திட்டம்) ஆகியவற்றுக்காக, மத்திய அரசு வழங்கும் நிதியைக் கொண்டு தான், ஓரளவிற்கு, அரசுப் பள்ளிகளில், உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. கழிப்பறை வசதி இல்லாத பள்ளிகளில், கழிப்பறை வசதி ஏற்படுத்த, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக