லேபிள்கள்

5.8.14

தலைமை ஆசிரியர்களின்றி தவிக்கும் அரசுப்பள்ளிகள்...

தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகளில் மேல்நிலைப்பள்ளிகளை நிர்வகிக்கும் முக்கியப் பதவியான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் பள்ளி நிர்வாகம் தடுமாறு நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினையில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டுமென ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் பெருவாரியான கிராமப்புற மாணவர்கள் கல்வி பெறும் வாய்ப்பை உருவாக்கும் வகையில் மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகள் தொடங்கப்பட்டன. இதில் அரசு உயர்நிலைப்பள்ளியின் எண்ணிக்கை தற்போது 3 ஆயிரமாகவும், மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 2500 ஆகவும் உள்ளன. இவற்றில் ஒரு பள்ளிக்கு சுமார் 10 முதல் 80 ஆசிரியர்கள் என்ற விகிதத்தில் ஏறத்தாழ 2.50 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகளை மேற்பார்வையிட்டு நிர்வகிக்க தலைமை ஆசிரியரின் பணி அத்தியாவசியமாகிறது. மாணவர்கள் சேர்க்கை, அரசின் 14 நலத்திட்ட உதவிகள், சமூகத்துடனான தொடர்பு, பெற்றோர், ஆசிரியர் கழகம், அன்னையர் குழு ஆகியவற்றை வழிநடத்துவது, அரசு கேட்கும் புள்ளி விவரங்களை மாதம் தோறும் அளிப்பது, வகுப்புகளை மேற்பார்வையிடுவது, பாடம் நடத்துவது, மாணவர்களின் கல்வித்தரத்தையும், தேர்ச்சி விகிதத்தையும் மேம்படுத்துவது, பள்ளி வளாகத்தூய்மை, சுகாதாரம் பேணுதல், ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு நிதிப்பலன் பெற்றுத்தருவது, விடுப்பு அனுமதிப்பது மற்றும் ஒட்டு மொத்தக் கண்காணிப்பு போன்ற பணிகளை தலைமை ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.

இச்சூழலில், தமிழகம் முழுதும் உள்ள மொத்தப்பள்ளிகளில் சுமார் 480 உயர்நிலைப்பள்ளிகளிலும், 150 -க்கும் மேல்பட்ட மேல்நிலைப்பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது அதிர்ச்சியளிக்கும் தகவலாகும். இந்நிலையில் பதவி உயர்வு பணி மூப்பு தொடர்பாக தமிழாசிரியர் கழகமும், பட்டதாரி ஆசிரியர் கழகமும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நடந்து வரும் நிலையில், இந்த வழக்கை முடிப்பதில் கவனம் செலுத்தாமல், கடந்த ஜூன்.20 -ம் தேதி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கல்வித்துறையால் நடத்தப்பட்டது.

இது குறித்த தகவல் நீதிமன்றத்துக்குத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கலந்தாய்வில் பங்கேற்றவர்களுக்கு ஆணை வழங்குவதற்குத் நீதிமன்றம் தடை விதித்தது. இதன் காரணமாக தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது அத்துடன், மாணவர்களின் கல்வித்தரம், பள்ளி நிர்வாகம் போன்றவற்றில் கவனம் செலுத்துவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்டம் தோறும் ஒவ்வொரு ஆண்டும் உயர்நிலை மேல்நிலைப்ப ள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், தலைமை ஆசிரியர் பதவிக்கு புதிய பணியிடங்கள் கூடுதலாக உருவாவதும், அதை நிரப்புவதில் தற்போது நடைமுறைச்சிக்கல் எழுந்துள்ளது. இந்த அசாதாரண நிலைக்கு காரணமாக உள்ள நீதிமன்ற வழக்கை முடித்து பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

இது குறித்து, தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி- மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மாநில பொதுச்செயலர் சாமிசத்தியமூர்த்தி கூறியது: புதுகை மாவட்டத் தலைநகரில் உள்ள நூற்றாண்டைக் கடந்த அரசு மேல்நிலைப்பள்ளி உள்பட மாநிலம் முழுதும் காலியாக உள்ள 150 -க்கும் மேல்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வின் மூலமாகவும், நீதிமன்ற வழக்கை முடித்து உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள சுமார் 500 -க்கும் மேல்பட்ட இடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித்துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தாமதம் ஏற்படின் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பணி ஓய்வுபெறும் தகுதியுள்ள ஆசிரியர்கள் இந்தப்பலன் கிடைக்காமல் ஏமாற்றம் அடையும் நிலையும் ஏற்பட்டுள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக