தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக வரும் 13ம் தேதி சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நேரில் ஆஜராக வேண்டும் என சேலம் வட்ட சட்டப்பணிகள் குழு உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூரில் வட்ட சட்டப்பணிகள் குழு இயங்கி வருகிறது. இந்த சட்டப்பணிகள் குழுவில் ஆத்தூர் வழக்கறிஞர்கள் இருவர் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் தமிழக அரசால் அமைக்கப்பட்ட கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டண விபரங்களை பொதுமக்களின் பார்வைக்கு படும்படி பலகையில் ஒட்டப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், பெற்றோர்கள் அறியும் வகையில் ஒட்டப்படவில்லை.
மேலும், மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணத்திற்கு முழுமையான ரசீது கொடுக்காமல், குறைந்த அளவு கட்டணத்திற்கும் மட்டும் ரசீதுகள் வழங்குகிறார்கள். எனவே, இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான மலர்மதி, வரும் 13ம் தேதி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வட்ட சட்டப்பணிகள் குழுவின் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக