லேபிள்கள்

4.8.14

அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் கலந்தாய்வு இன்றுடன் முடிவடைகிறது கடந்த ஆண்டைவிட காலி இடங்கள் அதிகரிப்பு

என்ஜினீயரிங் கலந்தாய்வு இன்றுடன் (திங்கட்கிழமை) முடிவடைகிறது. ஆனால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 20 ஆயிரம் இடங்கள் அதிகமாக காலியாக்கிடக்கும் நிலை உள்ளது.
கலந்தாய்வு இன்று முடிகிறது

தமிழ்நாட்டில் 541 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவ–மாணவிகளை பி.இ., பி.டெக். முதலாம் ஆண்டு சேர்ப்பதற்கான பொது கலந்தாய்வு கடந்த மாதம் 7–ந் தேதி தொடங்கியது. ஒரு மாதமாக கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது.
மொத்தம் உள்ள 2 லட்சத்து 4 ஆயிரத்து 77 இடங்களில் 1 லட்சத்து 3 ஆயிரம் பேர் இதுவரை சேர்ந்துள்ளனர். கலந்தாய்வுக்கு வரும்படி அழைப்பு விடுத்தும் 56 ஆயிரம் பேர் இதுவரை வரவில்லை. கலந்தாய்வு இன்று (திங்கட்கிழமை) முடிவடைகிறது.

கடந்த ஆண்டு 1 லட்சத்து 26 ஆயிரம் பேர் கலந்தாய்வு மூலம் கல்லூரிகளில் சேர்ந்தனர். ஆனால் இந்த ஆண்டு 1 லட்சத்து 6 ஆயிரம் பேர்தான் கலந்தாய்வு மூலம் சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 20 ஆயிரம் இடங்களில் மாணவர் சேர்க்கை குறைகிறது.

கலந்தாய்வு இன்று முடிவடைந்தாலும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கடந்த 1–ந் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான என்ஜினீயரிங் கல்லூரிகளில் தொடங்கின.
6, 7 தேதிகளில் கலந்தாய்வு
கலந்தாய்வு இன்று (திங்கட்கிழமை) முடிந்தாலும். பிளஸ்–2 தேர்வில் பெயிலான மாணவர்கள் உடனடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தனியாக கலந்தாய்வு 6–ந் தேதி நடத்தப்பட உள்ளது. அதற்காக மாணவ–மாணவிகள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நேரில் வந்து நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வில் அருந்ததியின மாணவ–மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நிரம்பாமல் சில இடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களில் எஸ்.சி. இன மாணவ–மாணவிகளை சேர்ப்பதற்கான கலந்தாய்வு 7–ந் தேதி நடக்கிறது. விருப்பம் உள்ள மாணவ–மாணவிகள் 7–ந் தேதி காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை தங்கள் பெயரை பதிவு செய்து பின்னர் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். ஏற்கனவே ஒதுக்கீட்டு ஆணை பெற்றவர்களும் கலந்தாய்வுக்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக