புதிய பாடத்திட்டங்கள் 3 மாதங்களில் உருவாக்கப்பட இருப்பதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறை சார்பில் புதிய பாடத்திட்டம்
வடிவமைப்பதற்கான கருத்தரங்கம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. கருத்தரங்கை பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பள்ளிக்கல்வி துறை செயலாளர் த.உதயச்சந்திரன் வரவேற்புரையாற்றினார்.
இதில் கலைத்திட்ட வடிவமைப்புக்குழு தலைவர் பேராசிரியர் எம்.ஆனந்த கிருஷ்ணன், ஜெர்மனி துணைத்தூதரகம் துணைத்தூதர் ஆஹிம் பாபிக், இந்திய விண்வெளி ஆராய்ச்சி துணைக்கோள் மையம் இயக்குனர்(பெங்களூரு) மயில்சாமி அண்ணாதுரை உள்பட கல்வியாளர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில் கலைத்திட்ட வடிவமைப்புக்குழு தலைவர் பேராசிரியர் எம்.ஆனந்த கிருஷ்ணன் பேசும்போது, ‘தற்போது பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 2030-ம் ஆண்டில் பள்ளிப்படிப்பை முடித்து வெளியே வருவார்கள். அப்படி வரும்போது, தொழில்நுட்பம் உள்பட பல்வேறு மாற்றங்கள் இருக்கும். அந்த மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்கள் உருவாகவேண்டும். அதற்கேற்றாற்போல் தான் இப்போது பாடத்திட்டம் தயாரிக்க வேண்டும்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி துணைக்கோள் மையம் இயக்குனர்(பெங்களூரு) மயில்சாமி அண்ணாதுரை பேசும்போது, ‘10 ஆண்டுகளுக்கு முன்பு சமச்சீர் புத்தகம் நன்றாக இருந்தது. அறிவியல், கலை, கணிதம் உள்பட பல்வேறு துறைகளில் மாற்றங்கள் ஏராளம் வந்துவிட்டது. அதற்கேற்றாற்போல் தற்போது பாடத்திட்டம் கொண்டு வரவேண்டும்.
அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-
மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து தேர்வுகளையும் சந்திப்பதற்கு இந்த அரசு புதிய திட்டத்தை விரைவில் உருவாக்க இருக்கிறது. பல்வேறு இடங்களில் இருந்து கல்வியாளர்கள், அதிகாரிகளை அழைத்து இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. தமிழ்நாட்டில் 40 ஆயிரம் தனியார் பள்ளிகள் உள்ளன. அதற்கு இணையாக அரசு பள்ளி கல்வித்தரத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சிறந்த கல்வியாளர்களை தேர்வு செய்து தற்போது பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட இருக்கிறது. இவர்கள் வைக்கும் கருத்துகளை முன்வைத்து பாடத்திட்டங்கள் உருவாக்கப்படும். அதன்பின், தமிழ்நாட்டை எவரும் மிஞ்ச முடியாத நிலையை ஏற்படுத்துவோம். மத்திய அரசுக்கு இணையாக பல்வேறு பாடமாற்றங்கள் உருவாக்கப்படுவதோடு கூட, நம்முடைய கலாசாரம், தொன்மை, பண்பாடுகள் தொய்ந்துவிடாமல் இந்த அரசு பாதுகாக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக