லேபிள்கள்

22.7.17

தனியார் மருத்துவ கவுன்சிலிங் விதிகளால் சிக்கல் : தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தனியார் மருத்துவ பல்கலை மாணவர் சேர்க்கை விதிகளால், அரசு கவுன்சிலிங்கில், மாணவர்கள் இட ஒதுக்கீடு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்படி, கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நிகர்நிலை எனப்படும், தனியார் மருத்துவ பல்கலைகளுக்கு, மத்திய அரசு கமிட்டி மூலம், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. முதல் சுற்று, ஜூலை, 5 முதல், 11 வரை நடந்து முடிந்துள்ளது.

மாணவர்களுக்கு சிக்கல் : இதில், இட ஒதுக்கீடு பெற்றவர்கள், இன்றைக்குள் கல்லுாரிகளில் சேர வேண்டும். இல்லையெனில், அந்த இடங்கள் இரண்டாம் சுற்றில் சேர்க்கப்படும். இதில், சுயநிதி பல்கலைகளின் மாணவர் சேர்க்கை விதிகளால், தமிழக மாணவர்களுக்கு சிக்கல் உருவாகியுள்ளது.

இது குறித்து, கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது: முதல் சுற்று கவுன்சிலிங்கில், தமிழக தனியார் பல்கலைகளில் இட ஒதுக்கீடு பெற்றவர்களில், 20 சதவீதம் பேர், கட்டண அதிகரிப்பால் இன்னும் சேரவில்லை.ஜூலை, 22க்குள் மாணவர்கள் சேராத இடங்கள், இரண்டாம் சுற்று கவுன்சிலிங்கில் சேர்ந்து விடும்.ஆக., 1ல், இரண்டாம் சுற்று கவுன்சிலிங் துவங்கி, ஆக., 8ல் முடிகிறது. இதில் ஒதுக்கீடு பெறுவோர், ஆக., 16க்குள் சேர வேண்டும். அதிலும் சேராவிட்டால், அவை இறுதியான, 'மாப் - அப்' என்ற, சுற்றுக்கு மாறும்.இந்தச் சுற்றில், சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான, என்.ஆர்.ஐ., இடங்களும், பொது இடங்களாக மாறும். இந்தச் சுற்றிலும், பெரும்பாலான இடங்கள் காலியாக வாய்ப்புள்ளது. அப்போது, அனைத்து இடங்களும், சம்பந்தப்பட்ட பல்கலைகளின் நிர்வாக ஒதுக்கீடுக்கு மாறி விடும்.
இந்த ஒதுக்கீட்டில் சேர விரும்புவோர், 'நீட்' தேர்ச்சி மட்டும் பெற்றிருந்தால் போதும். தரவரிசை பிரச்னையின்றி, பல்கலையின் விருப்பத்தின் அடிப்படையில், சேர்க்கை வழங்கலாம். இந்த சேர்க்கை, பல்கலைகளின் நேரடி முடிவாகும்.

உத்தரவு : இரண்டாவது சுற்றில், ஒருவர் இட ஒதுக்கீடு பெற்று விட்டால், அவர் சம்பந்தப்பட்ட தனியார் பல்கலையில் படிப்பில் சேர்ந்தாலும், சேரா விட்டாலும், மாநில ஒதுக்கீட்டு கவுன்சிலிங்கில் வர முடியாது என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த விதி, மற்ற மாநில மாணவர்களுக்கு பிரச்னை ஏற்படுத்தாது. சுயநிதி பல்கலையின் இரண்டாம் சுற்றுக்கு முன், மாநில அரசின் கவுன்சிலிங் முடிந்து விடும்.ஆனால், தமிழகத்தில், 'நீட்' தேர்வு பிரச்னையால், இன்னும் மாநில அரசின் கவுன்சிலிங் நடத்தப்படவில்லை. தற்போதைய நிலையில், மத்திய அரசின் இரண்டாம் சுற்று கவுன்சிலிங் துவங்கும், ஆக., 8க்குள், தமிழக அரசின் கவுன்சிலிங் நடக்க வேண்டும்.இல்லாவிட்டால், தமிழக மாணவர்கள், சுயநிதி பல்கலை அல்லது மாநில அரசின் கவுன்சிலிங் என, ஏதாவது ஒன்றில் மட்டுமே பங்கேற்கும் நிலை ஏற்படும்.
எனவே, தமிழகத்தில் மட்டும், இந்த விதியை தளர்த்த, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகி விலக்கு பெற வேண்டும். இல்லாவிட்டால், தகுதியான மாணவர்களுக்கு அரசு கல்லுாரியிலும், தனியார் பல்கலையிலும் இடம் கிடைக்காமல், தவிக்கும் மோசமான நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக