நல்லாசிரியர் விருதுக்கான விண்ணப்பங்களை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், திட்டமிட்டபடி விருது வழங்கப்படுமா என, ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இந்திய முன்னாள் ஜனாதிபதி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் சார்பில், நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன. தமிழக அரசின் விருது பெற்றவருக்கு மட்டும், தேசிய அளவில் விருது வழங்கப்படும். ஆண்டு தோறும், மாநில அரசின் நல்லாசிரியர் விருதுக்கு, தகுதியானவர்களின் விண்ணப்பங்கள், ஜூலை முதல் வாரத்திற்குள் பெறப்படும்.
இந்த ஆண்டு நல்லாசிரியர் விருதுக்கான விண்ணப்பம் குறித்து, இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. முன்பு போல, வெறும் அனுபவத்தை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், திறமையாக கற்றுத் தரும் ஆசிரியர்களுக்கு, விருது வழங்கும் வகையில், விதிகள் மாற்றப்படுகின்றன. அதனால், விண்ணப்ப அறிவிப்பு தாமதமாவதாக கூறப்படுகிறது. இதனிடையே, உரிய நேரத்தில் விண்ணப்ப அறிவிப்பு வெளியாகாததால், ஆசிரியர் தினத்தில் திட்டமிட்டபடி, விருது வழங்கப்படுமா என, ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக