லேபிள்கள்

20.7.17

தெலுங்கானா அரசு மாணவர்களுக்கு அறிவித்துள்ள அசத்தல் அறிவுப்புகள்

ஐதராபாத்: பள்ளி மாணவர்களின் புத்தக சுமைக்கு, எடை கட்டுப்பாடு விதித்துள்ளதுடன், 'ஐந்தாம் வகுப்பு வரை, 'ஹோம் ஒர்க்' கிடையாது' என்றும், தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.
தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசு அமைந்துள்ளது. 
மாணவர்கள் அதிக புத்தக சுமையை சுமந்து செல்வதால், உடல்நல பாதிப்புடன், மனநல பாதிப்பும் ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில், புதிய அறிவிப்புகளை, தெலுங்கானா அரசு நேற்று வெளியிட்டு உள்ளது.அதில் கூறியுள்ளதாவது:மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், ஆரம்பப் பள்ளி மாணவர்கள், 6 - 12 கிலோ வரையிலும், உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், 17 கிலோ வரையிலும், புத்தக சுமையை துாக்கிச் செல்லும் நிலை உள்ளது. இதனால், அவர்களுக்கு பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன; மனநல பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

மாணவர்களுக்கான புத்தக சுமைக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது; அதன்படி, முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் அதிகபட்சம், 1.5 கிலோ புத்தகத்தை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், 3 கிலோ; ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர்கள், 4 கிலோ புத்தகத்தை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும்.

எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள், 4.5 கிலோ; 10ம் வகுப்புக்கு, அதிகபட்சம், 5 கிலோ எடையுள்ளதாகவே புத்தக சுமை இருக்க வேண்டும். ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 'ஹோம் ஒர்க்' எனப்படும், வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது. இவற்றுக்கான அரசாணைகள் வெளியிடப்பட்டு உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக