சென்னை, 'நீட் தேர்வு தொடர்பாக, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பதில், திருப்தி அளிக்கவில்லை' எனக் கூறி, சட்டசபையில் இருந்து, எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக, வெளிநடப்பு செய்தன. சட்டசபையில் நடந்த விவாதம்:
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: மாநில பாடத்திட்டத்தில், 4.20 லட்சம் மாணவர்கள்; மத்திய அரசு பாடத்திட்டத்தில், 4,675 மாணவர்கள், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில், 88 ஆயிரத்து, 431 பேர், 'நீட்' தேர்வு எழுதினர். இவர்களில், 84 ஆயிரம் பேர், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள். நீட் தேர்வில் இருந்து, விலக்கு அளிக்கக் கோரி, சட்டசபையில், இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.அதை, மத்திய அரசு, ஜனாதிபதி அலுவலகத்திற்கு அனுப்பாதது, கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமானது. தமிழக மாணவர்களுக்கு, 85 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க, ஜூன், 22ல் அரசாணை வெளியிடப்பட்டது. அதற்கு, உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பொதுவாக, மருத்துவ கலந்தாய்வுக்கு பின், பொறியியல் கலந்தாய்வு துவங்கும். தற்போது, மருத்துவ கலந்தாய்வு முடிவாகாததால், பொறியியல் கலந்தாய்வு துவங்கிவிட்டது.
இதனால், மாணவர்கள் மற்றும் பெற்றோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு, மத்திய, மாநில அரசுகளே காரணம்.சட்டசபையில் நிறைவேற்றிய, சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் பெற, அரசுக்கு அருமையான வாய்ப்பாக, ஜனாதிபதி தேர்தல் கிடைத்தது. நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் சட்டத்திற்கு, ஒப்புதல் அளித்தால் தான், ஜனாதிபதி தேர்தலில், ஆதரவு தருவோம் என, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்கலாம்; அதை செய்யவில்லை. தற்போது, மீண்டும் துணை ஜனாதிபதி தேர்தல் வந்துள்ளது.
இதை, அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர்: நீட் தேர்வை, அனைத்து மாநிலங்களும் ஏற்றன; தமிழக அரசு மட்டுமே ஏற்காமல், போராடி வருகிறது. நீட் தேர்வில் விலக்கு கோரி, சட்ட மசோதா நிறைவேற்றி, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பினோம். அதில், தாமதம் ஏற்பட்டதால், மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து, மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு, 85 சதவீதம் இடஒதுக்கீடு அளித்து, அரசாணை வெளியிடப்பட்டது.மத்திய பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள், நீதிமன்றம் சென்று விடக்கூடாது என்பதற்காக, அவர்களுக்கு, 15 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. எனினும், 15க்கும் மேற்பட்டோர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அரசு மூத்த வழக்கறிஞர்களை நியமித்து, சிறப்பாக வாதாடியது. அதனால், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறியது. உயர் நீதிமன்றம் தடை விதித்ததும், உடனே மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதில், நல்ல தீர்ப்பு கிடைக்கும் என, நம்புகிறோம்.தமிழக மாணவர்களுக்கான உரிமையை பெற்றுத்தர வேண்டும் என்பதில், அரசு உறுதியாக உள்ளது.
ஆனால், சிலர் அரசுக்கு துணையாக இருக்காமல், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகின்றனர். அரசுக்கு எதிராக, ஒரு கட்சியின் மூத்த தலைவரின் மனைவி ஆஜராகி வாதாடுகிறார். சட்டசபையில் ஒரு மாதிரியும், சட்டசபைக்கு வெளியில் ஒரு மாதிரியும் பேசுகின்றனர். மத்திய அரசுக்கு, தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுத்து வருகிறது.முதன் முதலாக, மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்த போது, நீட் தேர்வு கொண்டு வர அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கூட்டணியில் இருந்த, தி.மு.க., அப்போதே எதிர்ப்பு தெரிவித்திருந்தால், இந்த சிக்கல் ஏற்பட்டிருக்காது.ஸ்டாலின்: மத்திய அரசு அறிவித்ததும், தி.மு.க., எதிர்ப்பு தெரிவித்தது. மத்திய அமைச்சருக்கு, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, கடிதம் எழுதினார். மேலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். தி.மு.க., ஆட்சியில் இருந்த வரை, நீட் தேர்வை வரவிடவில்லை.
இன்றைய சூழலில், நீதிமன்றத்தை அணுக முடியாது. எனவே, துணை ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால், ராஜினாமா செய்யுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக