லேபிள்கள்

21.7.17

கால்நடை மருத்துவ கலந்தாய்வில் பரபரப்பு: அமைச்சரை முற்றுகையிட்டு பெற்றோர், மாணவர்கள் போராட்டம்

சென்னையில் நடந்த கால்நடை மருத்துவ கலந்தாய்வில், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி அமைச்சரை முற்றுகையிட்டு மாணவர்களும், பெற்றோரும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2017–18–ம் ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பிற்கான 2 நாள் கலந்தாய்வு சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியில் நேற்று முன்தினம் தொடங்கியது.
முதல் நாள் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில் 233 இடங்களுக்கு 1,115 மாணவ–மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 786 பேர் கலந்தாய்வில் பங்கேற்றனர்.
இதில் முதல் 15 மாணவ–மாணவிகளுக்கு சேர்க்கை ஆணை வழங்கும் விழா நேற்று மதியம் வேப்பேரி கல்லூரியில் நடந்தது. விழாவிற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் திலகர் தலைமை தாங்கினார். சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி டீன் சி.பாலச்சந்திரன் வரவேற்று பேசினார். கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அரசு முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில் கால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி கலந்து கொண்டு மாணவ–மாணவிகளுக்கு சேர்க்கை ஆணைகளை வழங்கினார்.
விழா முடிவடைந்ததும் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி புறப்பட தயாரானார். அப்போது கலந்தாய்வில் பங்கேற்பதற்காக கல்லூரி வளாகத்தில் காத்திருந்த மாணவர்களும், அவர்களது பெற்றோரும் திடீரென அமைச்சரை முற்றுகையிட்டு போராட்டத்தில் குதித்தனர்.
அப்போது, நீட் தேர்வால் எம்.பி.பி.எஸ். மருத்துவ கனவு கேள்விக்குறியாகி விட்டதாகவும், அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கோ‌ஷங்கள் எழுப்பினர். சிலர் தமிழக அரசுக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்தும் கோ‌ஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் வேப்பேரி போலீசார் விரைந்து வந்து, அமைச்சரை மீட்டு அழைத்து சென்றனர். அவர் சென்ற பிறகும் பெற்றோர்களும், மாணவர்களும் போராட்டத்தை தொடர்ந்தனர்.
அப்போது, நீட் தேர்வால் எங்களுடைய மருத்துவ கனவு தகர்ந்து போய் விட்டது. கடின உழைப்பு வீணாகி விட்டது என்று கால்நடை மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்த சில மாணவ–மாணவிகள் தெரிவித்தனர்.
மேலும், நீட் தேர்வில் இருந்து தமிழக அரசு விலக்கு பெற்றுவிடும் என்று நம்பிக்கையுடன் இருந்தோம். இதனால் வேறு எந்த கல்லூரியிலும் சேருவதற்கு விண்ணப்பங்கள் வாங்காமல் இருந்துவிட்டோம். தற்போது என்ன செய்வது என்றே தெரியவில்லை. எங்களுடைய பிள்ளைகள் எதிர்காலமே கேள்விக்குறியாகி விட்டது என்று பெற்றோர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்து வைத்தனர். இதையடுத்து மாணவர்களும், பெற்றோர்களும் போராட்டத்தை கைவிட்டனர். நேற்று நடைபெற்ற கலந்தாய்வில் கலந்துகொள்ள தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக