லேபிள்கள்

8.2.14

10ம் வகுப்பில் முப்பருவ முறை வரும் : பொதுத் தேர்வு ரத்தாகுமா?

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் அடுத்த ஆண்டு முதல் முப்பருவ முறை(ட்ரைமஸ்டர்) வருகிறது. அதற்காக 2 பிரிவுகளாக
புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு உண்டா இல்லையா என்பது குறித்து குழப்பம் நீடித்து வருவதால் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் நடைமுறையில் இருந்த, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், மாநில கல்வி திட்டம், ஓஎஸ்எல்சி ஆகிய 4 கல்வி வாரியங்கள் கலைக்கப்பட்டு பொதுக் கல்வி வாரியம் கடந்த 2008ம் ஆண்டு அமைக்கப்பட்டது. 

இதையடுத்து, அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத்திலும் சமச்சீர் கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் முப்பருவ முறையை அரசு கொண்டு வந்தது. கடந்த 2009ம் ஆண்டு முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளிலும் முப்பருவ முறை நடைமுறைக்கு வந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் முப்பருவ முறை அனைத்து வகுப்புகளுக்கும் படிப்படியாக கொண்டு வரப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி இந்த ஆண்டு 9ம் வகுப்புக்கு முப்பருவ முறை நடைமுறைக்கு வந்துள்ளது. அடுத்த ஆண்டு 10ம் வகுப்புக்கு முப்பருவ முறை உண்டா இல்லையா என்ற குழப்பம் நிலவி வந்தது. 

இதற்கிடையே, 10ம் வகுப்புக்கான புத்தகங்கள் முப்பருவ முறைக்கு ஏற்ப பிரித்து அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கேற்ப முதல் பருவத்துக்கான புத்தகங்கள் எழுதப்பட்டு அரசு அனுமதிக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகங்கள் தமிழ், ஆங்கிலம் சேர்த்து ஒரு புத்தகமாகவும், அறிவியல், கணக்கு, சமூக அறிவியல் சேர்த்து ஒரு புத்தகமாகவும் அச்சிட அரசு திட்டமிட்டுள்ளது. அரசு விரைவில் இதற்கு அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மத்திய அரசு பள்ளி கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்தது போல, மாநில அரசு பாடத் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு பொதுத் தேர்வு நடத்துவதா வேண்டாமா என்பது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது. இதற்கு ஆசிரியர்கள் இடையே பெருத்த எதிர்ப்பு உள்ளது. 

முப்பருவ முறையை 10ம் வகுப்புக்கு அமல்படுத்தினால், பொதுத் தேர்வை எப்படி மதிப்பீடு செய்வது என்று ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதேபோல, முப்பருவ முறைப்படி 3 முறை தேர்வு நடத்தி மதிப்பீடு செய்வது என்பது 10 லட்சம் மாணவர்களுக்கு செய்ய முடியாது என்று தேர்வுத் துறையும் அரசுக்கு தெரிவித்துள்ளது. இந்நிலையில், 10ம் வகுப்புக்கு அடுத்த ஆண்டு சமச்சீர் கல்வியின் கீழ் முப்பருவ முறை வந்தாலும், தேர்வு ரத்தாகுமா என்பது குறித்து வருகிற சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பார்கள் என்று பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக