ஆசிரியர்
தகுதி தேர்வில் (TET) இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை
வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதன்படி, தாழ்த்தப்பட்டோர்,
பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம் சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்டோர்,
மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள்
ஆகியோருக்கு இனி 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும்.
இது குறித்து சட்டப்பேரவையில் இன்று
ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதில்
அளித்து முதல்வர் ஜெயலலிதா பேசியது:
ஆசிரியர் தகுதித் தேர்வு, அதாவது
(Teachers Elegibility Test) தேர்வில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர்,
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிறப்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு மதிப்பெண்ணில்
சலுகை வழங்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளினை சில உறுப்பினர்கள் இங்கே
தெரிவித்தனர்.
2009-ம் ஆண்டைய குழந்தைகளுக்கான இலவச
மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மத்திய அரசால் இயற்றப்பட்டுள்ளது. இந்தச்
சட்டத்தின்படி, பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுபவர்கள் அரசால்
நியமிக்கப்பட்ட நிறுவனத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்.
இந்தச் சட்டத்தின் அடிப்படையில், தேசிய
ஆசிரியர் கல்விக் குழுமம், 1 முதல் 8-ம் ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு
தகுதித் தேர்வினை கட்டாயமாக்கி அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின்
அறிவிக்கைகளின்படி, 1 முதல் 5-ம் வகுப்புக்கான இடைநிலை ஆசிரியர்கள், தேசிய
ஆசிரியர் கல்விக் குழுமம் ஒழுங்குமுறை விதிகள் 2002-ன் படி ஆசிரியர் பயிற்சியில்
இரண்டாண்டு பட்டயப்படிப்பும்; மேல்நிலைத் தேர்வில் குறைந்தபட்சம் 45 சதவீத
மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். 2002-ம் ஆண்டு ஒழுங்கு விதிமுறைகளுக்கு முன்
இரண்டாண்டு பட்டயப் படிப்பு தேர்ச்சி பெற்றிருந்தால், மேல்நிலைத் தேர்வில்
குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
அதேபோன்று, 6 முதல் 8 ஆம் வகுப்புக்கான
பட்டதாரி ஆசிரியர்கள், தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் ஒழுங்குமுறை விதிகள்
2002-ன் படி, ஒர் ஆண்டு பி.எட். பட்டமும், பட்டப் படிப்பில் 45 சதவீத
மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
2002 ஆம் ஆண்டுக்கு முன் பி.எட். பட்டம்
பெற்றிருந்தால், பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
இதன் பின்னர், தேசிய ஆசிரியர் கல்விக்
குழுமத்தால் 1.4.2011 அன்று வெளியிடப்பட்ட கடிதத்தில், அந்தந்த மாநிலங்களில்
கடைபிடிக்கப்படும் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு ஏற்ப, தாடிநத்தப்பட்ட மற்றும்
பழங்குடியின பிரிவினருக்கு மட்டும் மேல்நிலைத் தேர்வு மற்றும் பட்டப் படிப்பு
தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்களில் 5 சதவீதம் தளர்வு அளிக்கலாம் என
தெரிவித்துள்ளது.
இதன்படி, 2002-ம் ஆண்டுக்கு பின்
ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பை முடித்தவர்கள் மேல்நிலை தேர்வில் 40 சதவீத
மதிப்பெண்ணும்; அதற்கு முன்னர் தேர்வு பெற்றவர்கள் 45 சதவீத மதிப்பெண்ணும்
பெற்றிருக்க வேண்டும்.
ஆனால், தற்போது தமிழகத்தில் மேல்நிலைத்
தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்கள், அதாவது 35 சதவீதம் பெற்றவர்களும், ஆசிரியர்
தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர். எனவே, மத்திய அரசு அறிவித்துள்ளதை
விட அதிகச் சலுகை தமிடிந நாட்டில் அளிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று, 2002-ம் ஆண்டுக்கு பின்
பி.எட். படித்தவர்கள், பட்டப் படிப்பில் 45 சதவீத மதிப்பெண்களும், அதற்கு முன்னால்
பி.எட். படித்தவர்கள், பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க
வேண்டும். தமிழகப் பல்கலைக்கழகங்கள் 40 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தாலே பட்டம்
வழங்குவதால், மத்திய அரசு அறிவித்துள்ளதை விட தமிழகத்தில் அதிகச் சலுகை
அளிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற
60 சதவீதம் பெற வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தால்
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே சமயத்தில், தாழ்த்தப்பட்டோர்,
பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு
அந்தந்த மாநிலத்தில் உள்ள இட ஒதுக்கீடு கொள்கையின்படி தேர்ச்சி மதிப்பெண்களில்
சலுகை வழங்கிடப் பரிசீலிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வின் தேர்ச்சி, இட
ஒதுக்கீட்டை நிர்ணயிப்பதில்லை. ஆசிரியர்களை பணியிடங்களில் நியமிக்கும்போது தான் இட
ஒதுக்கீடு கடைபிடிக்கப்படுகிறது. ஆசிரியர் நியமனத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு
முழுமையாக பின்பற்றப்படுகிறது.
எனினும், இந்த அவையில் தெரிவிக்கப்பட்ட
கருத்துக்களின் அடிப்படையில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற 60 சதவீதம்
மதிப்பெண் பெற வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், இனி தாழ்த்தப்பட்டோர்,
பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்), மிகவும்
பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு 5
சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும்.
அதாவது தாழ்த்தப்பட்டோர்,
பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்), மிகவும்
பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் ஆசிரியர்
தகுதித் தேர்வில் இனி 55 சதவீதம் மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெற்றவர்கள் என
அறிவிக்கப்படுவார்கள். இந்தச் சலுகை தற்போது ஆகஸ்ட் 2013 ஆம் ஆண்டு ஆசிரியர்
தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டுள்ள தகுதி தேர்வுக்கும் பொருந்தும்" என்று
முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக