லேபிள்கள்

6.2.14

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஓராண்டு பட்டப்படிப்பு செல்லாது என்ற தமிழக அரசின் முடிவு சரியே ஐகோர்ட்டு தீர்ப்பு

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஓராண்டு கால பட்டப்படிப்பு தகுதி செல்லாது என்று தமிழக அரசு எடுத்துள்ள முடிவு சரியானது என்று ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

ஓராண்டு பட்டப்படிப்பு
ஒரு பாடத்தில் மூன்று ஆண்டு காலம் படித்து பட்டம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள், பணி வாய்ப்பு மற்றும் பதவி உயர்வு போன்ற காரணங்களுக்காக இன்னொரு பாடத்தில் ஓராண்டு படித்து பட்டம் பெறுகின்றனர்.
இதை எதிர்த்து ஆசிரியர்கள் சிலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள். அதில், இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கும்போது மூன்றாண்டு கால பட்டம் பெற்றவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டும். ஓராண்டு காலத்தில் கூடுதலாகப் பெற்ற பட்டப்படிப்பின் அடிப்படையில் ஆசிரியராக பதவி உயர்வு வழங்கக் கூடாதுஎன்று கூறியிருந்தனர்.
செல்லாது
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், ‘‘இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்காக ஓராண்டு காலத்தில் பெற்ற பட்டப்படிப்பு செல்லாது என்றும் அந்த பட்டப்படிப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க கூடாதுஎன்றும் கடந்த 2012–ம் ஆண்டு தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து, ஓராண்டு காலத்தில் பிற படிப்பில் பட்டம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர்.
அதேபோல, நீதிபதி ராமசுப்பிரமணியனின் தீர்ப்பின் அடிப்படையில், ஓராண்டு பட்டம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான (ஆசிரியர்) தகுதி தேர்வு எழுத அனுமதி வழங்க முடியாது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் பலர் வழக்கு தொடர்ந்தார்கள்.
அரசின் முடிவு
இந்த வழக்குகள் அனைத்தையும் தலைமை நீதிபதி ராஜேஷ் குமார் அக்ரவால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்து நேற்று தீர்ப்பளித்தனர். அந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:–
இந்த வழக்கில், தமிழக அரசு சார்பில் ஆஜராஜ கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.எச்.அரவிந்த்பாண்டியன், ‘கூடுதலாக பட்டம் பெறுவதற்கு ஓராண்டு கால பட்டப்படிப்பு என்பது மிகவும் குறுகிய காலம் என்பதாலும், இந்த படிப்பால், மாணவர்களுக்கு நன்கு பாடம் நடத்துவதற்கு ஏற்ற அறிவு திறனையோ, அனுபவத்தையோ ஆசிரியர்களால் பெற முடியாது என்பதாலும், இந்த ஓராண்டு கால பட்டப் படிப்பின் அடிப்படையில் பதவி உயர்வு பெற முடியாது என்று சரியான முடிவை தமிழக அரசு எடுத்துள்ளதுஎன்று வாதம் செய்தார்.
சரியானது அல்ல
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், ‘இந்த ஓராண்டு கூடுதல் பட்டப்படிப்பு அடிப்படையில் ஏற்கனவே இடைநிலை ஆசிரியர்கள் பலருக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இப்போது அந்த வாய்ப்பு வழங்க முடியாது என்று அரசு முடிவு செய்துள்ளது சரியானது அல்லஎன்று வாதம் செய்தார்கள்.
ஆனால், எங்களை பொறுத்தவரை ஓராண்டு கூடுதல் பட்டப்படிப்பை முடித்து விட்டு இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்று அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்ற செல்வார்கள்.
தரமான கல்வி
அந்த 2 வகையான பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழை மற்றும் சமுதாயத்தில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்தவர்கள்.
அத்தகைய மாணவர்கள் தரமான கல்வியினை பெற்று, தங்கள் வாழ்வில் முன்னேறி, இந்த நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும். எனவே அவர்களுக்கு தரமான கல்வி என்பது மிகவும் அவசியமானதாகும்.
இதனை கருத்தில் கொண்டு, ஓராண்டு பட்டப்படிப்பு முடித்த இடைநிலை ஆசிரியர்களை, பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு பரிசீலிக்கப்பட மாட்டாது என்று தமிழக அரசு சரியான முடிவினை எடுத்துள்ளது. இந்த முடிவில் எந்த உள்நோக்கமும் இல்லை.
தள்ளுபடி
இடைநிலை ஆசிரியர்கள் ஏற்கனவே வேறு ஒரு பாடத்தில் பட்டம் பெற்று விட்டு, பதவி உயர்வுக்காகவும் மற்றொரு பாடத்தில் ஓராண்டு படித்து பட்டம் பெறுவதை ஏற்க முடியாது என்று தனி நீதிபதி ராமசுப்பிரமணியன் பிறப்பித்த தீர்ப்பும் சரியானதுதான்.
இந்த தீர்ப்பின் அடிப்படையில் ஓராண்டு கால பட்டப்படிப்பை முடித்தவர்களை ஆசிரியர் தகுதி தேர்வில் கலந்துக் கொள்ள அனுமதிக்க முடியாது என்று ஆசிரியர் தேர்வு வாரியமும் சரியான முடிவினை எடுத்துள்ளது. எனவே இந்த மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக