"ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, 5 சதவீத தளர்வு வழங்கப்படும்' என, முதல்வர் அறிவிப்பு வெளியிட்டதை
தொடர்ந்து, நேற்று, அரசாணை பிறப்பிக்கப்பட்டது.பள்ளி கல்வித்துறை செயலர், சபிதா, நேற்றிரவு வெளியிட்ட அரசாணை: முதல்வர் அறிவிப்பின்படி, டி.இ.டி., தேர்வில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), சீர்மரபினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர், டி.இ.டி., முதல் தாள் (இடைநிலை ஆசிரியர்), இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) ஆகிய இரண்டிலும், 55 சதவீத மதிப்பெண் எடுத்தால், தேர்ச்சி என, அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 55 சதவீத மதிப்பெண்ணான 82.5ஐ, 82 மதிப்பெண்ணாக முழுமையாக்கி, அரசு உத்தரவிடுகிறது. கடந்த 2013ல் நடந்த டி.இ.டி., தேர்வுகளுக்கும், 5 சதவீத மதிப்பெண் சலுகை பொருந்தும். மேலும், வரும் காலங்களில் நடக்கும் அனைத்து டி.இ.டி., தேர்வுகளிலும், பொதுப்பிரிவினர் தேர்ச்சி பெறுவதற்கு, 150க்கு, 90 மதிப்பெண்களும் (60 சதவீதம்), மேற்குறிப்பிட்ட இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, 82 மதிப்பெண்களும் (55 சதவீதம்) பெற வேண்டும் என, நிர்ணயித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு, சபிதா தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையில், "ஆசிரியர் தகுதித் தேர்வு, மதிப்பெண் சலுகை, 2012ல், தேர்வு எழுதியவர்களுக்கும் வழங்க வேண்டும்' என, 2012 தேர்வில், 55 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள், முதல்வர் அலுவலகத்தில், மனு கொடுத்து உள்ளனர். மனுவில், அவர்கள் கூறியிருப்பதாவது: மதிப்பெண் சலுகை குறித்த முதல்வர் அறிவிப்பு, மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள், 2012 தேர்வில், 55 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளோம்.
எனவே, மதிப்பெண் சலுகையை, 2012ம் ஆண்டுக்கும் அறிவிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக