சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்கள் எம்.பழனி முத்து, ஏ.ரமேஷ் உள்பட பலர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:– தேசிய
ஆசிரியர் கல்வி வாரியத்தின் அறிவிக்கையின்படி மாநில அரசுகள் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடத்துகிறது. ஆந்திரா உள்ளிட்ட 13 மாநிலங்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு முறையில் தகுதி மதிப்பெண் வழங்குகிறது.
ஆனால் தமிழகத்தில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றாமல் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்துகிறது. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எனவே தமிழகத்தில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு முறையை பின்பற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறபட்டு இருந்தது. இதற்கு பதில் மனுதாக்கல் செய்த ஆசிரியர் தேர்வு வாரியம், ‘‘தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக தகுதி மதிப்பெண் அடிப்படையில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு 90 மதிப்பெண் எடுத்தவர்கள் (60 சதவீதம்) தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட வேண்டும் என்று அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது என்று கூறியிருந்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி எம்.சத்திய நாராயணன் ஆகியோர் விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கினர். அதில் ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு எடுத்துள்ள கொள்கை முடிவில் கோர்ட்டு தலையிட முடியாது. எனவே இந்த பொது நல மனுக்களை தள்ளுபடி செய்கிறோம் என்று தீர்ப்பு கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக