தமிழகத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளை கண்காணிக்க அதிகாரிகள் இல்லாததால், அவற்றின் செயல்பாடு கவலையளிப்பதாக கல்வித் துறையில் சர்ச்சை எழுந்துள்ளது.
இத்துறையின் கீழ் மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் ஆரம்பப் பள்ளிகள் என, 5 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளிகளை கண்காணிக்க, இயக்குனருக்கு அடுத்து, மண்டல உதவி கல்வி இயக்குனர் பணியிடம் மட்டுமே உள்ளது. இப்பணியில் இருந்த சந்திரசேகரன், பதவி உயர்வில் சென்ற பின், கடந்த ஓராண்டாக அப்பணியும் காலியாக உள்ளது. பள்ளிக் கல்வித் துறையில், இயக்குனருக்கு கீழ், இணை இயக்குனர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் என பல்வேறு பிரிவுகளில் அதிகாரிகள் உள்ளனர். இதேபோல், தொடக்கக் கல்வி, அனைவருக்கும் கல்வியிலும் உள்ளனர். ஆனால், இத்துறையில் இதுபோன்ற அமைப்புகளும், அதிகாரிகளும் இல்லை. மாறாக, பல்வேறு பணிகளுக்கு இடையே ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார்கள் தான் 'மானிட்டர்' பணிகளில் ஈடுபடுகின்றனர். இதன் விளைவாக, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் குறைந்து விடுகிறது. இதனால், இத்துறை ஆசிரியர்கள் ஆண்டுதோறும் நடவடிக்கைகளுக்கு ஆளாகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் மனோகர் கூறியதாவது: பள்ளிக் கல்வியை போல், இத்துறையிலும் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். டி.இ.ஓ., சி.இ.ஓ., இணை இயக்குனர் என்ற பதவிகள் இல்லாததால், தலைமையாசிரியர் தான் இத்துறைக்கு உச்சகட்ட பதவி உயர்வு. 25 ஆண்டுகளாக இதே நிலைதான். சமீபத்தில், 50 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு, தலா 5 பணியிடங்கள் மட்டும் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், பள்ளிக் கல்வி மேல்நிலைப் பள்ளிகளில் 9 ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 155வது விதிப்படி, பள்ளிக் கல்விக்கு உள்ள விதிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கும் பொருந்தும். இதை சுட்டிக்காட்டி பல ஆண்டுகளாக போராடுகிறோம். இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இப்பள்ளிகளை வருவாய்த் துறையின் தாசில்தார்கள் தான் ஆய்வு செய்கின்றனர். இதை மாற்றி, இத்துறைக்கும் தனி இயக்குனரகம் ஏற்படுத்தி, டி.இ.ஓ.,க்கள், சி.இ.ஓ.,க்கள் பணியிடங்களை தமிழக அரசு உருவாக்க வேண்டும். அப்போதுதான் கல்வித் தரமும், தேர்ச்சி விகிதமும் அதிகரிக்கும், என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக