மத்திய அரசு ஊழியர்களுக்கான, அகவிலைப்படி உயர்வு, அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 10 சதவீதம் உயர்த்தப்படும்
என தெரிகிறது. இதனால், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 100 சதவீதம் ஆக உயரும். லோக்சபா தேர்தலுக்கு முன் தரப்படும் இந்த உயர்வு, மத்திய அரசு ஊழியர்களை மகிழ்விக்கும் தகவலாகும்.
ஆறு மாதத்திற்கு ஒரு முறை:
மத்திய அரசு ஊழியர்களுக்கு, அடிப்படை சம்பளத்துடன், அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும். இது, ஆறு மாதத்திற்கு, ஒரு முறை அளிக்கப்படும். கடந்தாண்டு, செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டு, அந்த உயர்வு ஜூலை முதல் அமலுக்கு வந்தது.கடந்த முறை போல், இந்தாண்டும், 10 சதவீத அகவிலைப்படி உயர்வு இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலக ஊழியர்களுக்கான, அகில இந்திய நுகர்வோர் விலை பட்டியல் அடிப்படையில், அகவிலைப்படி உயர்வு, முடிவு செய்யப்படுகிறது.வரும், 28ம் தேதி இந்த பட்டியல் வெளியாகிறது. இதன் அடிப்படையில், எத்தனை சதவீதம் என்பது முடிவு செய்யப்படுகிறது. இதற்கான அறிவிப்பு, அடுத்த மாதம் வெளியாகிறது; ஜனவரி, 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.ஆரம்ப கட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் பார்த்தால், 10 சதவீத உயர்வு இருக்கும் என, எதிர்பார்க்கப்பபடுகிறது. இதன் மூலம் மொத்த அகவிலைப்படி உயர்வு, 100 சதவீதத்தை எட்டும். அடிப்படை சம்பளத்தில் அகவிலைப்படி, 50 சதவீதத்தை தாண்டும் போது, 50 சதவீதத்தை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. இப்போது, அகவிலைப்படி, 100 சதவீதம் ஆக உள்ளது. இந்த, 100 சதவீதத்தையும், அடிப்படை சம்பளத்துடன் சேர்த்து, சம்பள வீதங்களை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும்.அது பெரும் சுமையாக அரசுக்கு அமையும். அதன் விளைவுகள் பின்பு தரவேண்டிய பென்ஷன் சுமையும் கூட அரசுக்கு ஏற்படலாம்.
ஐந்து கோடி ஓட்டு:
இந்த அகவிலைப்படி உயர்வு மூலம், 50 லட்சம் ஊழியர்களும், 30 லட்சம் பென்ஷன்தாரர்களும் பலன் அடைவர். எண்பது லட்சம் பேர் பயனடைவதால், அவர்களைச் சார்ந்த குடும்பத்தினர் எண்ணிக்கையை கணக்கில் கொண்டால், ஐந்து கோடி ஓட்டுகள், மத்திய அரசுக்கு ஆதரவாக கிடைக்க வாய்ப்பு உள்ளது.தவிரவும், தற்போதைய பணவீக்கத்தை ஒப்பிடும் போது, இச்சலுகை குறைவாக இருக்கிறது. மத்திய அரசு நியாயமாக தர வேண்டியது, 300 சதவீத உயர்வு என, அகில இந்திய அரசு ஊழியர் சம்மேளன தலைவர், குட்டி கூறியுள்ளார்.இந்த அறிவிப்பு முறையாக வெளியிடும் பட்சத்தில், மத்திய அரசுக்கு ஏற்படும் செலவினம் எவ்வளவு என்பது வெளிவரும். ஏற்கனவே, பணவீக்கத்தை குறைக்க, ரிசர்வ் வங்கி கவர்னர் புதிய அணுகுமுறையில் நடவடிக்கை எடுத்து வரும் சூழ்நிலையில், இது பணவீக்கத்தை அதிகரிக்கும் செயலாக அமையும்.தவிரவும் ஏற்கனவே, சமையல் காஸ் சிலிண்டர், ஒன்பது தர மத்திய அரசு முடிவு எடுத்து அதற்கு, 5,500 கோடி ரூபாய் செலவழிக்க முன்வந்த அரசு, அடுத்தடுத்த செலவுகளை ஏற்படுத்தி, கட்டுக்கடங்காமல் செல்லும், அரசின் நிதிப் பற்றாக்குறையை ஊக்குவித்தால், அடுத்த சில மாதங்களில் பதவியேற்கும் புதிய அரசுக்கு, அதிக நிதிச்சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக