லேபிள்கள்

2.2.14

குளிரில் நடுங்கும் பள்ளி குழந்தைகள்: கிடப்பில் போடப்பட்ட 'ஸ்வெட்டர்' திட்டம்

மலைப்பிரதேசத்தில் வசிக்கும் பள்ளிக் குழந்தைகளை, கடும் குளிரில் இருந்து பாதுகாக்க, அரசு சார்பில், 'ஸ்வெட்டர்' வழங்கும் திட்டம், நீலகிரி
மாவட்டத்தில் மட்டுமே, நடைமுறையில் உள்ளது. மற்ற மலைப்பிரதேச மாவட்டங்களில், இத்திட்டம் விரிவுபடுத்தப்படாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பள்ளிகளுக்கு சப்ளை:



கைத்தறி மற்றும் விசைத்தறி கூட்டுறவு நெசவாளர் சங்கங்களுக்கு, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம், அரசின் விலையில்லா வேட்டி, சேலை, பள்ளிக் குழந்தைகளுக்கு சீருடை தயாரிக்க, 'ஆர்டர்' வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடைகள், கைத்தறியிலேயே தயாரிக்க முடியாது என்பதால், விசைத்தறி நெசவாளர் சங்கங்களுக்கும், சீருடை தயாரிப்பதற்கான ஆர்டர்களை, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் பெற்று, பள்ளிகளுக்கு சப்ளை செய்து வருகிறது. சத்துணவு திட்டத்தில் இணைந்துள்ள, முதல் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு, நான்கு செட் வீதம், மெரூன் கலர் பேன்ட்டும், வெள்ளை கலர் சட்டையும் வழங்கப்படுகிறது. அதேபோல், மாணவியருக்கு, பாவாடை மெரூன் நிறத்திலும், 'சல்வார் கமீஸ்' வெளிர்நிற பிரவுன் நிறத்திலும் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு, நான்கு செட் சீருடைகள் வழங்கப்படுவதால், விசைத்தறி நெசவாளர்கள், துணி பதனிடும் தொழிலாளர்கள் ஆகியோருக்கு, ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.


காலதாமதம்:



மாநிலம் முழுவதும், இத்திட்டம் அமல்படுத்தப்பட்டாலும், மலைப்பிரதேச பகுதியில், கடுங்குளிர் மற்றும் அசாதாரண கால நிலைகள் அவ்வப்போது ஏற்படுவதால், குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில் காலதாமதம், இடைநிற்றல், கல்வி பாதிப்பு ஆகியவை ஏற்படுகிறது. இதையடுத்து, மலைப் பிரதேசங்களில் பயிலும் பள்ளி குழந்தைகளுக்கு, கம்பளி ஆடையான ஸ்வெட்டர் வழங்கும் திட்டம், நீலகிரி மாவட்ட மலைப் பிரதேச பள்ளி மாணவர்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் உள்ள மலைப் பிரதேச பள்ளி குழந்தைகளுக்கு, ஸ்வெட்டர் வழங்கவில்லை என்ற, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:




மலைப் பிரதேச குழந்தைகளின் நலன் கருதி, வழங்கம் போல் வழங்கும் சீருடையுடன், 10 லட்சம் குழந்தைகளுக்கு, ஸ்வெட்டர் வழங்க, திட்டம் தயாரிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் தவிர, மற்ற மாவட்ட மலைப்பிரதேசங்களில் படிக்கும் குழந்தைகளுக்கு, ஸ்வெட்டர் வழங்கவில்லை.நடப்பு கல்வியாண்டில், ஸ்வெட்டர் வழங்குவதாக கூறி, முன்மொழிவு கோரப்பட்டது. ஆனால், இதுவரை, ஸ்வெட்டர் வழங்குவதற்கான எவ்வித நடவடிக்கையும் இல்லை. நீலகிரி மாவட்டத்துக்கு வழங்குவது போல், மற்ற மலைப் பிரதேச மாவட்ட பள்ளி மாணவர்களுக்கும், ஸ்வெட்டர் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக