பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம், ஆசிரியர்கள், ஒப்புதல் கையெழுத்து பெற வேண்டும் என்ற நடைமுறை, இந்த ஆண்டில்
அமலாகிறது.தமிழகத்தில், மார்ச் 3ம் தேதி, பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது; 25ம் தேதி தேர்வு முடிகிறது. மார்ச் 26ம் தேதி, 10ம் வகுப்பு தேர்வு துவங்குகிறது.தேர்வில் முறைகேடுகளை தவிர்க்க, கல்வித் துறை, புதிய அறிவிப்பை வெளிட்டுள்ளளது.இது பற்றி கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தேர்வு துவங்கும் நாளில், தலைமை ஆசிரியர் அறைக்கு, வினாத்தாள் வந்து சேரும். தேர்வு எழுதும் அறையில் பணியாற்ற உள்ள, ஆசிரியர்கள் கையொப்பமிட்டு, அதை எடுத்துச் செல்வர்.தலைமை ஆசிரியர் அறையில் இருந்து, உத்தரவு அல்லது பெல் அடித்தபின், வினாத்தாளை காலை, 10:00 மணிக்கு பிரிக்க வேண்டும். தாமதமின்றி, உடனே மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
சில ஆசிரியர்கள், தங்களுக்கு நெருங்கிய பள்ளிகளுக்கு செல்லும்போது, வினாத்தாள் கிடைத்ததும், 10:00 மணிக்கு முன்பே பிரித்து விடுகின்றனர். கேள்விகளை, முன்கூட்டியே தெரிந்து கொள்கின்றனர்.
இப்பிரச்னையை தவிர்க்க, தேர்வெழுதும் மாணவர்களிடம், கையெழுத்து பெற, தேர்வுத்துறை இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.காலை, 10:00 மணிக்கு, வினாத்தாள் கட்டு பிரிக்கப்பட்டதும், தேர்வு எழுதும் மாணவர்களிடம், "சரியான நேரத்துக்கு ஆசிரியர் வினாத்தாள் வழங்கினார்; முன்கூட்டியோ, தாமதம் செய்தோ பிரிக்கவில்லை' என, ஆசிரியர் கையெழுத்து பெற வேண்டும். நான்கு மாணவர்களிடம் வாங்கினால் போதுமானது.இதில், முரணாக ஏதேனும் நடந்தால், மாணவர்கள் கையெழுத்திட மறுக்கலாம். தேர்வு
கண்காணிப்பாளர் வரும்போது, அவரிடம் தெரிவிக்கலாம்.தேர்வு முடிந்தவுடன் விடைத்தாளை பெறும் ஆசிரியர், மாணவர்களிடம் பெறப்பட்ட ஒப்புதலை, தலைமை ஆசிரியரிடம் காண்பிக்க வேண்டும். மாணவர்கள் தேர்வு எழுத துவங்கும் முன், கையெழுத்து பெற்று விட வேண்டும்.அவசர கதியில் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் போது, தேர்வு முடியும் தருவாயில் கையெழுத்து பெற்று, அவர்களுக்கு காலதாமதத்தை, ஆசிரியர் உருவாக்கிக் கொடுக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, கல்வி அதிகாரி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக