பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டங்களுக்கு, ஒப்புதல் அளிப்பதில், தமிழக அரசு, கால தாமதம் செய்து வருகிறது.
வரும், 2015 16ம் கல்வி ஆண்டில், பிளஸ் 1க்கும், 2016 17ல், பிளஸ் 2வுக்கும், புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது. இதற்காக, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம், பாட வாரியான வல்லுனர் குழு மூலம், 25 பாட தலைப்புகளில், வரைவு பாட திட்டத்தை தயாரித்தது.
பின், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் என, பல தரப்பினரிடமும், கருத்துக்களை கேட்டு, தேவையான மாற்றங்களைச் செய்து, வரைவு பாடதிட்டத்தை, இறுதி செய்தது. இதற்கு, தமிழக அரசின் ஒப்புதல் கேட்டு, கோப்பு அனுப்பி, பல மாதங்கள் ஆகின்றன. இதுவரை, அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை. முதல்வர், தீவிர தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால், ஒப்புதல் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே, அரசின் ஒப்புதலுக்காக, கோப்பு அனுப்பப்பட்டதாக, கல்வித்துறை கூறுகிறது.
இது குறித்து, துறை வட்டாரம் கூறியதாவது: புதிய பாடத்திட்டத்திற்கு, அரசு ஒப்புதல் அளித்தால் தான், அடுத்த கட்டமாக, பாட தலைப்பு வாரியாக, விரிவாக பாடம் எழுத முடியும். இந்த பணி முடியவே, ஓர் ஆண்டை தாண்டிவிடும். பின், எழுதிய பாடங்களை, ஒன்றுக்கு பல முறை சரிபார்த்து, பாட புத்தகங்களை அச்சிட வேண்டும். இந்த பணிகளுக்கு, அதிக கால அவகாசம் தேவைப்படும். எனவே, புதிய பாடத்திட்டங்களுக்கு, விரைந்து அனுமதி கிடைத்தால் தான், அடுத்தடுத்த பணிகள் வேகமாக நடக்கும். இவ்வாறு, அவ்வட்டாரம் தெரிவித்தது. பத்தாம் வகுப்பிற்கு, முப்பருவ கல்வி முறை திட்டம் கொண்டு வரும் விவகாரத்தில், கடைசிவரை, அரசு, எவ்வித முடிவும் எடுக்காததால், வரும் கல்வி ஆண்டில், பழைய முறையே தொடர உள்ளது. இதே நிலை, பிளஸ் 1, பிளஸ் 2 பாட திட்டங்களுக்கும் ஏற்பட்டால், பெரிய குழப்பம் ஏற்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக