லேபிள்கள்

16.4.14

தேர்தல் பெண் அலுவலர்கள் நீண்டதூரம் பயணிக்க வேண்டிய அவலம் புதிய சாப்ட்வேரால் வந்தது சிக்கல்

நாடாளுமன்ற தேர்தல் பணியாற்றும் பெண் அலுவலர்கள் 100கி.மீ., தூரம் வரை பணிக்காக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 
தேர்தல் பணியில் ஈடுபடும் பெண் அலுவலர்கள், அருகில் உள்ள சட்ட மன்ற தொகுதியில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் முதல்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பில் பெண் அலுவலர்களிடம் எழுதி வாங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் ஆயிரத்து 711 வாக்குச் சாவடிகளில் பணியாற்ற 8 ஆயிரத்து 373 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 ஆயிரத்து 600 பேர் பெண்கள். 
இவர்கள் அனைவரும் அருகில் உள்ள சட்டமன்ற தொகுதியில் பணியாற்ற வாய்ப்பு கிட்டும் என எதிர்பார்த்திருந்தனர். தேர்தல் பணியாற்ற சுமார் 20 கி.மீ., தூரத்திற்குள் சென்று வந்து விடலாம் என நினைத்திருந்தனர். 
இந்நிலையில் தேர்தல் அலுவலர்களுக்கு பூத்துகள் பிரிக்கும் பணி, தொகுதி பார்வையாளர் அனில்குமார் முன்னிலையில் கடந்த 12ம் தேதி நடைபெற்றது. தேர்தல் ஆணை யம் வழங்கிய சாப்ட்வேரில் அலுவலகளுக்கு பூத் பிரிக்கும் பணி நடைபெற்றது. கணினியிலிருந்து பெறப்பட்ட லிஸ்ட்டில் பெண் அலுவலர்களில் பெரும்பாலோருக்கு அருகில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் பணிக்கான பொறுப்பு கிடைக்கவில்லை. ஒவ்வொரு பெண் அலுவலரும் சுமார் 100 கி.மீ தூரம் வரை செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் தேர்தல் பணிக்காக பெண் அலுவலர்கள் உறவினர்களை அழைத்துச்செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 
இதுபற்றி பெண் அலுவலர்கள் கூறுகையில், `அருகில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் பணியிடம் கிடைக்கும் என நினைத்திருந்தோம். அருப்புக்கோட்டையிலிருந்து திருவில்லிபுத்தூருக்கும், திருச்சுழி  யிலிருந்து ராஜபாளையத்திற்கும் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அங்கிருந்து கடைக்கோடி கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என்பதால் பெண்கள் சிரமத்திற்கு உள்ளாக நேரிடும் என்றனர்.  

தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறுகையில், `தமிழக தேர்தல் ஆணையம் வழங்கிய சாப்ட்வேரில் உள்ளபடிதான் பணியிடங்களை ஒதுக்கீடு செய்துள்ளோம். 8 ஆயிரத்து 373 அலுவலர்களில் 5 ஆயிரத்து 600 பேர் பெண் அலுவலர்களாக உள்ளனர். சாப்ட்வேர் தயாரிப்பில் உள்ள குறைபாடுகளும், அதிக எண்ணிக்கையில் பெண் அலுவலர்கள் உள்ளதாலும் இந்த நிலை உருவாகி உள்ளது. தமிழகம் முழுவதும் இதே நிலைதான். இதில் மாற்றம் ஏதும் செய்ய இயலாது என தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக