வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் 21 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார்.
17 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் ‘வெப்’ கேமரா பொருத்தப்பட உள்ளது. தேர்தல் பணியில் 21 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மத்தியசென்னை பாராளுமன்ற தொகுதி, ஆலந்தூர் இடைத்தேர்தல் தொகுதி உள்பட 1,200 வாக்காளர்கள் மேல் உள்ள வாக்குச்சாவடிகளில் 5 பேரும், மற்ற வாக்குச்சாவடிகளில் 4 பேரும் பணியில் அமர்த்தப்படுவர்.
வனப்பகுதிகள், மலைப்பகுதிகள் உள்பட எளிதில் செல்ல முடியாத 21 வாக்குச்சாவடிகளுக்கு 23–ந்தேதி (புதன்கிழமை) வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்து செல்லப்படும். ஒவ்வொரு வாக்குச்சாவடி அருகில் வசிக்கும் அரசியல் கட்சிகளை சாராத 2 பொதுமக்களின் தொலைபேசி எண்கள் பெறப்பட்டுள்ளது. அதன்மூலம் வாக்குச்சாவடியில் நிலவும் சூழல் குறித்த தகவல்கள் அவ்வப்போது பரிமாறி கொள்ளப்படும்.
தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் உள்பட அரசு ஊழியர்களுக்கு ஒதுக்கப்படும் வாக்குச்சாவடி குறித்த தகவல் 23–ந்தேதி அறிவிக்கப்படும். வாக்குச்சாவடிக்கு 200 மீட்டர் முன்பு அரசியல் கட்சிகள் தங்கள் ‘பூத்’களை அமைத்துக் கொள்ளலாம். கண்பார்வையற்ற வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய சிறப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
22–ந்தேதி மாலை தேர்தல் பிரசாரம் ஓய்ந்த பிறகு, அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்காளர்களை தவிர வேறு யாரும் இருக்கக்கூடாது. கல்யாண மண்டபங்கள், லாட்ஜ்களில் சோதனை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு பிரவீன் குமார் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக