ஓட்டுச்சாவடியில் பணியாற்றும் அலுவலர்களை, எந்த ஓட்டுச்சாவடியில் பணி ஒதுக்கீடு செய்வது என்பதை, மத்திய தேர்தல் பார்வையாளர்கள், நேற்று, "ரேண்டம்' முறையில் ஒதுக்கீடு செய்தனர். ஆனால், "சம்பந்தப்பட்ட அலுவலர், எந்த சட்டசபை தொகுதியில் பணியாற்றுவது என்பதை மற்றும் அறிய முடியுமே தவிர, எந்த ஊர் என்பதை, தேர்தல் நடக்கும் நாளுக்கு ஒரு சில நாள் முன்னதாக வெளியிடப்படும்' என, கிடுக்கிப்பிடி உத்தரவு போடப்பட்டுள்ளதாக, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்தல் கமிஷன், 16வது லோக்சபா தேர்தலை நடத்தி வரும் நிலையில், தமிழகத்தில், வரும், 24ம் தேதி, ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அலுவலர்கள் பட்டியல், அந்தந்த துறை சார்பில், கடந்த, ஃபிப்ரவரி கடைசி வாரத்தில் தயாரிக்கப்பட்டது.
அந்த பட்டியல், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஒப்பதலுடன், சட்டசபை தொகுதி வாரியாக, தேர்தல் கமிஷனுக்கு, ஆன்-லைனில், "அப்டேட்' செய்யப்பட்டது. எந்த ஓட்டுச்சாவடியில் பணி ஒதுக்கப்படும் என்ற விபரம், எந்த அலுவலருக்கும் தெரியாது. அதற்காக, பிரத்யாகமான, "சாஃப்ட்வேர்' தயாரிக்கப்பட்டு, ரேண்டம் முறையில், மத்திய தேர்தல் ச்பார்வையாளர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில், பணிகள் ஒதுக்கப்படும்.
ஆனால், கடந்த கால தேர்தல்களில், ஓட்டுச்சாவடியில் பணியாற்றும் அலுவலர்கள், தங்களுக்கு விருப்பமான ஓட்டுச்சாவடியை கேட்டு பெற்றுச் சென்றனர். மேலும், மேல் அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு, அவர்கள் வசிக்கும் இடத்தில் உள்ள ஓட்டுச் சாவடிகளில் பணியாற்றினர்.
அதில், பல முறைகேடு மற்றும் புகார்கள் வந்ததால், தேர்தல் கமிஷன் புதிய நடைமுறையை அமல்படுத்தி உள்ளது. அதனால், தேர்தல் பணியில், ஓட்டுச்சாவடியில் பணியாற்றுபவர்களின் சிபாரிசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதில், ஒரு சட்டசபை தொகுதிக்குள் பணியாற்றும் அலுவலர், வேறு சட்டசபை தொகுதியில் பணியாற்ற வேண்டிய நிலை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில், அனைத்து லோக்சபா தொகுதிக்கும், மத்திய செலவின பார்வையாளர் மற்றும் மத்திய பொது பார்வையாளர் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், பொது பார்வையாளர், ஓட்டுச்சாவடியில் பணியாற்றும் அலுவர்களுக்கு, பணி ஒதுக்கீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அதற்காக, அந்தந்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில், சட்டசபை தொகுதி வாரியாக பட்டியல்கள் மாற்றி அமைக்கப்பட்டது. அடுத்தாக, எந்த ஊர் என்ற விபரம், தேர்தலுக்கு ஒரு சில நாள் முன்னதாக தான் தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது:
ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களின் பட்டியலில், நேற்று முன்தினம், எந்த சட்டசபை தொகுதியில், அவருக்கு பணி ஒதுக்கப்பட்டது என்ற விபரம் தெரிவிக்கப்பட்டது. வரும், 22 அல்லது, 23ம் தேதி தான், எந்த ஓட்டுச்சாவடியில் பணி என்பது தெரியவரும். அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அலுவலர், பணி ஒதுக்கீடு கடிதத்தை பெற்றுக் கொண்டு, தேர்தல் நடக்கும் நாளுக்கு முதல் நாள் அங்கு இருக்க வேண்டும். புதிய நடைமுறையால், எவ்வித முறைகேடு மற்றும் சிபாரிசு நடக்க வாய்ப்பு ஏற்படாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக