லேபிள்கள்

16.4.14

தபால் ஓட்டு பதிவு செய்த ஓட்டுச்சாவடி அலுவலர்கள்

திருப்பூர் மாவட்டத்தில், தேர்தல் பணியாற்ற உள்ள ஓட்டுச்சாவடி அலுவலர்கள், அந்தந்த சட்டசபை தொகுதிகளில், நேற்று, தபால் ஓட்டுக்களை பதிவு செய்தனர்.திருப்பூர் மாவட்டத்தில், 10 ஆயிரத்து176 ஓட்டுச்சாவடி அலுவலர்கள், தேர்தல்பணியாற்ற உள்ளனர். மேலும்,
"மைக்ரோ அப்சர்வர்'கள், மண்டல தேர்தல் அலுவலர்கள், போலீசார் மற்றும் டிரைவர்கள் என 13 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் தபால் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சட்டசபை தொகுதி தோறும், இணை இயக்குனர் நிலையிலான அதிகாரிகள் தலைமையில், ஓட்டுச்சாவடி உதவி மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள பிற தொகுதிகளில் ஓட்டு உள்ள அலுவலர்கள், தாங்கள் பணியாற்றும் தொகுதியில் இருந்தே, தங்களது ஓட்டுக்களை பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளிலும், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் நேற்று நடந்தது. அப்போது, ஒவ்வொரு அலுவலரும் பணியாற்றும் தொகுதி தெரியவந்தது. வேறு தொகுதிகளில் பணியாற்றும் அலுவலர்கள், நேற்றே, தங்களது ஓட்டை பதிவு செய்தனர். பட்டியலில் பெயருள்ள தொகுதிக்குள் பணி நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்கு, அடுத்த பயிற்சியின்போது, இ.டி.சி., (எலக்ஷன் டியூட்டி சர்டிபிகேட்) வழங்கப்படும். அதை பயன்படுத்தி, பணியாற்றும் ஓட்டுச்சாவடியில், தங்களது ஓட்டை பதிவு செய்ய தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது.தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள், வெளிமாவட்டத்தில் உள்ள தொகுதிகளுக்கு, தபால் மூலம் ஓட்டளிக்கலாம். கட்சியினர் முன்னிலையில், ஓட்டுப்பெட்டிகள் காலியாக இருப்பது உறுதி செய்யப்பட்டு, மூடி "சீல்' வைக்கப்பட்ட பிறகு, தபால் ஓட்டுப்பதிவு துவங்கியது. தாங்கள் வாக்காளர் என்று உறுதி கூறும் படிவம் 13ஏ, "பேலட் சீட்' உள்ள 13பி, தபால் ஓட்டு போடுவதற்கான அறிவுரை வழங்கும் படிவம் 13டி மற்றும் படிவம் 13சி ஆகியவை வழங்கப்படுகிறது.தங்களுக்கு விருப்பமான வாக்காளர்களுக்கு ஓட்டை பதிவு செய்து, உறையை மூடி, 13ஏ படிவத்தையும் சேர்த்து, 13சி படிவ உறைக்குள் வைத்து, பெட்டியில் போட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அறிவுரை படிவம் 13டி-யை அவர்களே வைத்துக்கொள்ளலாம். கலெக்டர் முன்னிலையில், தபால் ஓட்டு பெட்டி திறக்கப்பட்டு, அந்தந்த தொகுதிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படும், என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக