பல்வேறு வழக்குகள், குழப்பமான உத்தரவுகளால், பள்ளி கல்வித்துறையில், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமனம் செய்யும் விவகாரம், ஜவ்வாக இழுக்கிறது. ஜூனில் பள்ளிகள் திறக்கின்றன. ஆனால், புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய முடியாத இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பாதிப்பு ஏற்படும்.அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர், 12 ஆயிரம் பேரை நியமனம் செய்யும் பணி, பல மாதங்களாக, ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கிறது.
சிக்கல்
கடந்த ஆண்டு மத்தியில் நடந்த, முதுகலை ஆசிரியர் தேர்வும், கடந்த ஆண்டு, ஆகஸ்ட்டில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வும் (டி.இ.டி.,), இதுவரை, நிறைவு பெறவில்லை.முதுகலை ஆசிரியர்களில், தமிழ் ஆசிரியர்கள் மட்டும், நியமனம் செய்யப்பட்டு விட்டனர். இதர பாடங்களுக்கான ஆசிரியர் தேர்வு, இடியாப்ப சிக்கலாக உள்ளது. எந்த தேர்வை எடுத்தாலும், நீதிமன்ற வழக்கில் இருப்பதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) கூறுகிறது.
இதனால், முதுகலை ஆசிரியர்கள், எப்போதுநியமனம் செய்யப்படுவர் என, தெரியாத நிலை உள்ளது.டி.இ.டி., தேர்வில், மதிப்பெண் சலுகை அளித்ததன் காரணமாக, இரண்டாவது சுற்று, சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது.
கூடுதலாக தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு, வரும், 6 முதல், 12ம் தேதி வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
புதிய ஆசிரியர்கள்
இந்த தேர்வு தொடர்பாகவும், வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், ஜூன், 2ம் தேதி பள்ளிகள் திறந்ததும், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய முடியாத நிலை உள்ளது.குறிப்பாக, முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்வதில் ஏற்பட்டுள்ள கால தாமதத்தால்,பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, பாதிப்பு ஏற்படும்.அதேபோல், பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்யாததால், 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், 'வழக்குகள், விரைவில் முடிவுக்கு வந்து விடும். மாணவர்கள் கல்வி பாதிக்காத அளவிற்கு, புதிய ஆசிரியர்களை, விரைந்து நியமனம் செய்ய, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என, தெரிவித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக