லேபிள்கள்

2.5.14

வசூல் வேட்டையில் இறங்கியுள்ள கல்லூரி கல்வி இயக்குனரக பணியாளர்கள்

தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, கல்வி உதவித்தொகை வழங்க, கல்லூரி கல்வி இயக்குனரக பணியாளர்கள், 15 ஆயிரம் ரூபாய் கேட்டு கட்டாய வசூலில் இறங்கியுள்ளதால், கல்லூரி நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 700க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இதில் பி.எட். படிப்புக்கு 43,500 ரூபாய், ஆசிரியர் கல்வி டிப்ளமோ படிப்புக்கு 23,500 ரூபாய், என கட்டணமாக அரசு நிர்ணயித்து உள்ளது. ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, கல்வி தொகையை அரசே செலுத்துவதைபோல், தனியார் கல்லூரிகளில் படிக்கும் எஸ்.சி. -- எஸ்.டி. மாணவர்களின் கல்வித்தொகையை அரசே செலுத்துகிறது.
இதனால் அரசு கல்லூரிகளை போலவே, தனியார் கல்லூரிகளிலும் எஸ்.சி.- - எஸ்.டி. மாணவ மாணவியர், இலவசமாக பி.எட். ஆசிரியர் கல்வி டிப்ளமோ படிக்க முடியும். கல்வி உதவித்தொகையை, நேரடியாக, மாணவ, மாணவியரின் வங்கிக் கணக்கில் செலுத்தும் வகையில், அனைத்து மாணவ, மாணவியரும் வங்கிக் கணக்கு துவங்க உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், கல்லூரி முதல்வர்கள் நேரடியாக கல்லூரிக் கல்வி இயக்குனரகத்தில், 2013 - 14ம் ஆண்டுக்கான, எஸ்.சி. - எஸ்.டி. மாணவர்களின் கல்வி உதவித்தொகையை, காசோலையாக பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. காசோலை பெறும்போது, ஒவ்வொரு கல்லூரியும் 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என இயக்குனரக பணியாளர்கள் ரகசிய உத்தரவிட்டுள்ளனர். இதனால், தனியார் கல்லூரிகள், எஸ்.சி. - எஸ்.டி. மாணவ, மாணவியரிடம் வசூல் வேட்டையில் இறங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
தனியார் கல்வியியல் கல்லூரி முதல்வர் ஒருவர் கூறியதாவது: தற்போது காசோலையாக, கல்லூரி முதல்வரிடம் ஒப்படைத்து, அதற்கு லஞ்சமாக 15 ஆயிரம் ரூபாய் பெறுகின்றனர். இதற்கு ஆகும் செலவையும் சேர்த்து, இதை பல மடங்காக மாணவர்களிடம் வசூல் செய்யவே ஒவ்வொரு கல்லூரி நிர்வாகமும் முயற்சி செய்யும். இதனால் இலவசமாக படிக்க முடியும் என எதிர்ப்பார்த்திருந்த மாணவ, மாணவியர் அதிர்ச்சியடைய வாய்ப்புள்ளது.
700 கல்லூரிகளிடம், தலா 15 ஆயிரம் ரூபாய் வசூலித்தால், ஒரு கோடி ரூபாயை தாண்டுகிறது. உயர்கல்வித் துறை அமைச்சர் மற்றும் இயக்குனர் கவனத்துக்கு செல்லாமல், இந்த வசூல் வேட்டை நடக்க வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக