இந்தியாவில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி கட்டாயம் தேவை என்ற சுற்றறிக்கை ஒன்றை கல்வி இயக்ககம் இந்த மாதம் 4ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ளது. ஒவ்வொரு பள்ளியும் குறைந்தது இரண்டு விளையாட்டு அணிகளையாவது உருவாக்கி மண்டல போட்டிகளில் பங்கு பெறவேண்டும் என்று அரசு அறிக்கை குறிப்பிடுகின்றது.
அதுமட்டுமின்றி, இடைவேளை நேரங்களில் மாணவர்களுக்கான சிரிப்பு சிகிச்சை பயிற்சிகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. விளையாட்டை பள்ளி வாழ்க்கையுடன் ஒருங்கிணைக்கும் விதமாக பல சிறப்பு திட்டங்களையும் கல்வி இயக்ககம் அறிமுகப்படுத்தி வருவதாக கல்வி இயக்குனர் பத்மினி சிங்லா தெரிவித்துள்ளார்.
அதேசமயம், மாணவர்களுக்கான பாதுகாப்பிலும் அரசு நிறைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் எறி ஈட்டி பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது 11 வயது மாணவன் ஒருவன் தாக்கப்பட்டு உயிரிழந்ததை அரசு கவனத்தில் கொண்டு புதிய பாதுகாப்பு வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
பள்ளி பயிற்சிக் காலங்களில் மட்டுமல்லாது போட்டிகள் நடைபெறும் நேரத்திலும் மாணவர்களுக்கான பாதுகாப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. நீச்சல் குளங்களுக்கான புதிய பாதுகாப்பு விதிமுறைகள் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளன. எறிஈட்டி போன்ற ஆபத்தை ஏற்படுத்தும் விளையாட்டுக் கருவிகள் பூட்டியிருக்கும் இடங்களில் பாதுகாப்புடன் கையாளப்படவேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதுபோல் அவசர காலங்களில் உதவுவதற்காக ஓட்டுனருடன் கூடிய நான்கு சக்கர வாகனம் ஒன்று தயார் நிலையில் இருக்கவேண்டும் என்பதுவும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று கல்வித்துறையில் விளையாட்டுப் பிரிவின் துணை இயக்குனர் பிரதீப் தயாள் குறிப்பிட்டுள்ளார்.
வரும் 2017ஆம் ஆண்டு இந்தியாவில் நடக்கவிருக்கும் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கு பெறும் விதமாக மாணவர்களுக்கான பயிற்சியை அளிக்க கல்வித்துறை அனைத்துப் பள்ளிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. 20 சதவிகித பள்ளிகளில் கால்பந்து மைதானங்கள் இருப்பதால் இதற்கான முயற்சி சாத்தியமே என்று இயக்ககத்தின் அறிக்கை குறிப்பிடுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக