லேபிள்கள்

27.4.14

ஓட்டு இயந்திரங்களை சேகரிப்பதில் காலதாமதம் : ஓட்டுச்சாவடி அலுவலர்கள் கடும் அவதி

ஓட்டுப்பதிவு இயந்திரங்களை சேகரிக்கும் பணி, மிகவும் காலதாமதமானதால், ஓட்டுச்சாவடி அலுவலர்கள், பெரிதும் அவதிப்பட்டனர். தமிழகம் முழுவதும், நேற்று முன்தினம், ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றது. அதன்பின் ஓட்டுச்சாவடி அலுவலர்கள், ஓட்டுப்பதிவு இயந்திரத்தை எடுத்து செல்ல வரும் அலுவலர்களுக்காக காத்திருந்தனர்.
சரியான பதில் இல்லை : ஆனால், பல ஓட்டுச்சாவடிகளில், நள்ளிரவு வரை, ஓட்டுப்பதிவு இயந்திரத்தை எடுத்து செல்ல, யாரும் வரவில்லை. இதனால், ஊழியர்கள் செய்வதறியாமல், ஓட்டுச்சாவடியில் அமர்ந்திருந்தனர். பெண் ஊழியர்கள் வீட்டிற்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, சரியான பதில் இல்லை. தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் முறையிட்டும் பயனில்லை.

இதனால், ஊழியர்கள் திட்டியபடி அமர்ந்திருந்தனர். பெண் ஊழியர்களை அழைத்து செல்ல, அவர்களது குடும்பத்தில் இருந்து வந்தவர்கள், ஓட்டுச்சாவடிக்கு வெளியே காத்து கிடந்தனர். பல ஓட்டுச்சாவடிகளில், நள்ளிரவு, 12:00 மணிக்கு மேல், ஓட்டுப்பதிவு இயந்திரங்களை எடுத்து சென்றனர். இதுகுறித்து, தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஊழியர்கள் கூறும் போது, "ஓட்டுப்பதிவு முடிந்த சில மணி நேரங்களில், ஓட்டுப்பதிவு இயந்திரங்களை எடுத்து செல்ல, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் ஆண் ஊழியர்களை மட்டும் இருக்க சொல்லிவிட்டு, பெண் ஊழியர்களை அனுப்புவதற்காவது, ஏற்பாடு செய்ய வேண்டும். சட்டசபை தேர்தலிலாவது, தேர்தல் கமிஷன் இந்நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.

1 கருத்து: