நாமக்கல் மாவட்டத்தில், தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்களுக்கு, தபால் ஓட்டுக்கான விண்ணப்பம், உரிய நேரத்தல் அனுப்பாமல் தாமதப்படுத்தியதால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள், ஓட்டுச்சாவடியில் ஓட்டளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு, உரிய விண்ணப்பத்தை வழங்கி, தபாலில் ஓட்டளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நாமக்கல் லோக்சபா தேர்தலுக்காக, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 1,475 ஓட்டுச்சாவடிகளிலும், தலா, ஐந்து தேர்தல் அலுவலர், பாதுகாப்பு போலீஸ், உள்ளூர் வருவாய் துறையினர் என, எட்டாயித்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றினர். அவர்களுக்கு, வேட்பாளர் சின்னங்கள் அறிவிக்கப்பட்ட பின், ஓட்டு போடுவதற்கான, விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்திற்குள் பணியாற்றும் அலுவலர்கள், அந்தந்த ஓட்டுச்சாவடியில் ஓட்டு போட வசதிகள் செய்யப்பட்டது. ஆனால், பெரும்பாலான அலுவலர்களுக்கு, ஓட்டுப்போட அனுமதிக்கும் விண்ணப்பங்கள் வழங்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
அதனால், அவர்கள், ஓட்டுப்பதிவு நாளில், எவருக்கும் ஓட்டு போட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். தேர்தல் பணியில் ஈடுபடாத அலுவலர்கள், அவரவர் சொந்த ஊரில், தங்களது ஓட்டுகளை பதிவு செய்தனர். தேர்தல் பணியில் ஈடுபட்ட பெரும்பாலான அலுவலர்கள், எந்த ஓட்டும் போட முடியாத நிலையில் உள்ளனர்.
வெளிமாவட்டத்தில் பணியாற்றும், அரசு ஊழியர் மற்றும் சீருடை பணியில் இருப்பவர்கள், பணியாற்றும் மாவட்டத்தில் இருந்து, விண்ணப்பங்களை பெற்று, தங்களது லோக்சபாவில் உள்ள வேட்பாளர்களுக்கு ஓட்டை பதிவு செய்து, தபால் மூலம் அனுப்பலாம். அதற்காக, ஒவ்வொரு சட்டசபை தொகுதி தலைமை அலுவலகத்தில், தபால் ஓட்டுப்பதிவு பெட்டி வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
எனவே, தேர்தல் பணியில் ஈடுபட்டு, ஓட்டளிக்காத அலுவலர்களுக்கு, உரிய விண்ணப்பங்களை வழங்கி, தபால் ஓட்டு போட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஓட்டுச்சாவடியில் அல்லது தபால் மூலம் ஓட்டு போடாத அலுவலர்கள், தங்களது விபரங்களை, மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலர்களிடம் தெரிவித்து, தபால் ஓட்டு விண்ணப்பத்தை பெற்று, ஓட்டை பதிவு செய்யலாம். அவர்களுக்காக, வரும், மே, 15ம் தேதி வரைஓட்டளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக