பள்ளிகளில் தேர்வு முடிந்துள்ள நிலையில், காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்கள் எடையில் வரும் பணத்தை விளையாட்டு பொருட்கள் வாங்குவதற்கு தலைமை ஆசிரியர்கள் பயன்படுத்த வேண்டும்.
பெரியகுளம் கல்வி மாவட்டத்தில் 30 அரசு மேல்நிலைப்பள்ளிகளும், 40 உயர்நிலைப்பள்ளிகளும் உள்ளன. பள்ளிகளில் மாதாந்திர தேர்வு, காலாண்டு, அரையாண்டு, முழுஆண்டு தேர்வுகள் நடக்கிறது. பிளஸ் 2, பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பிற்கு தேர்வுகள் நடந்து முடிந்துள்ளது. அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு முடிந்துவிடும்.
முழு ஆண்டு பேப்பர்களை தவிர, ஆண்டு தோறும் ஒவ்வொரு பள்ளியிலும் பழைய விடைத்தாள்கள் ஆயிரக்கணக்கான கிலோ சேர்கிறது. மேல்நிலைப்பள்ளிகளில் 5000 கிலோவில் இருந்து 7000 கிலோ வரை விடைத்தாள்கள் மற்றும் பழைய புத்தகங்கள், எடைக்கு போடப்படுகின்றன. விடைத்தாள் ஒரு கிலோ 10 ரூபாயில் இருந்து 12 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு மேல்நிலைப்பள்ளிக்கும் சராசரியாக 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரையிலும், உயர்நிலைப்பள்ளிகளில் 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரையிலும், நடுநிலைப்பள்ளிகளுக்கு 15 ஆயிரமும், ஆரம்பப் பள்ளிக்கு 10 ஆயிரம் வரை வருவாய் கிடைக்கிறது.
தலைமை ஆசிரியர்களின் மேற்பார்வையில் பேப்பர் எடைக்கு போடப்படுகிறது. இதனை பல தலைமை ஆசிரியர்கள், பள்ளி வளர்ச்சிக்காக பெற்றோர் ஆசிரியர் சங்கம் மேற்பார்வையில் வாலிபால், கூடைப்பந்து, வளைபந்து, டென்னிஸ், கிரிக்கெட் பேட் உட்பட விளையாட்டு உபகரணங்கள் வாங்குகின்றனர். சில தலைமை ஆசிரியர்கள் இதனை பின்பற்றுவதில்லை. முழுப்பணத்தையும் தங்களது சொந்த செலவிற்காக பயன்படுத்துகின்றனர். முறைகேடுகளை தடுப்பதற்கு மாவட்ட கல்வி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக