நாமக்கல்: "மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆங்கில வழி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது. அவற்றை பெற்றொர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்" என, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் ஆங்கில வழிக்கல்வி மீதான மோகத்தின் காரணமாக மெட்ரிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. அதேபோல், அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களே மாநில அளவில் இடம் பிடித்து சாதனை படைத்து வருகின்றனர். அதன் காரணமாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளையும் ஆங்கில வழி கல்வியில் சேர்க்க விரும்புகின்றனர். அதற்காக, எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிக்க தயாராக உள்ளனர்.
இது, அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைவுக்கு ஒரு காரணம். அதனால், அரசு பள்ளிகளிலும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு முடிவு செய்து கடந்த ஆண்டு ஆங்கில வழி வகுப்புகள் துவங்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் 2013-14ம் கல்வி ஆண்டில் 18 அரசு உயர்நிலைப்பள்ளி, 22 அரசு மேல்நிலைப்பள்ளிகள் என, மொத்தம் 40 பள்ளிகளில், ஆறு, ஒன்பது, பிளஸ் 1 வகுப்புகளுக்கு ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டது.
இந்த வகுப்புகளுக்கு பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. அதனால், நடப்பு கல்வி ஆண்டு (2014-15) மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும், ஆங்கில வழி வகுப்புகள் துவங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் 50 உயர்நிலை மற்றும் 78 மேல்நிலைப்பள்ளிகள் என, மொத்தம் 128 அரசு பள்ளிகளில், இந்த ஆண்டு ஆங்கில வழி வகுப்புகள் துவங்க திட்டமிடப்பட்டுள்து. அப்பள்ளிகளில், கட்டணம் எதுவும் இல்லை. ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு, தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு கிடைக்கும் அனைத்து அரசு சலுகைகளும் பெற்றுத்தரப்படும்.
இது குறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: "ஆண்டு தோறும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருகிறது. அதற்கு காரணம், பெற்றோர்களிடையே ஆங்கில மோகம் அதிகரித்துள்ளதே. அவற்றை கருத்தில் கொண்டு அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கவும், அனைத்து மாணவர்களும் ஆங்கில வழிகல்வியை பெறவேண்டும் என்ற நோக்கில் அரசு பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியை துவக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, கடந்த ஆண்டு 40 பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்புகள் துவங்கப்பட்டது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதைதொடர்ந்து, இந்த ஆண்டு 128 பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்புகள் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில பிரிவுகளில் ஆறு, ஒன்பது, பிளஸ் 1 வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக