லேபிள்கள்

30.4.14

அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு போடுவதில் சிக்கல் : அரசியல் கட்சியினர் கலெக்டரிடம் புகார்

தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு இதுவரை தபால் ஓட்டு போடுவதற்கான படிவம் கிடைக்காததால் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் கட்சியினர் புலம்பி வருகின்றனர்.
தேர்தலில் ஓட்டு போடுவது என்பது தனிமனித ஜனநாய கடமை. உரிமையும் கூட. அதனையொட்டியே தேர்தல் ஆணையம் கடந்த 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலை திருத்தப்பணி மேற்கொண்டு வந்தது.
இதற்காக சிறப்பு முகாம்களையும் நடத்தியது. தேர்தல் ஆணையத்தின் தீவிர நடவடிக்கையால், தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளில் 5 கோடியே 51 லட்சத்து 14 ஆயிரத்து 867 ஆக உயர்ந்தது. இது கடந்த 2011 சட்டசபை தேர்தலைவிட 79 லட்சத்து 97 ஆயிரத்து 568 பேர் கூடுதலாகும்.
வாக்காளர் சேர்க்கையில் தீவிரம் காட்டியது போன்று, ஓட்டு போடுவது அனைவரின் கடமை என்பதை உணர்த்தும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டது. அதேப்போன்று அனைவரும் ஒட்டு போடும் வகையில், ஓட்டுச் சாவடிகளின் எண்ணிக்கையையும், ஓட்டுப்பதிவு நேரத்தையும் அதிகரித்தது.
மேலும், ராணுவத்தில் பணி புரிபவர்களுக்கு "சர்வீஸ்' தபால் ஓட்டு போடும் பொருட்டு, முன் கூட்டியே அவர்கள் பணிபுரியும் இடத்திற்கே ஓட்டுச் சீட்டுகளை தபாலில் அனுப்பி வைக்க உ<த்தரவிட்டது.
மேலும், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது ஓட்டுரிமையை பயன்படுத்தும் வகையில் தபாலில் ஓட்டு போடவோ, அல்லது அதே லோக்சபா தொகுதிக்குள் பணிபுரிபவர்கள் என்றால் அவர்கள் பணிபுரியும் ஒட்டுச் சாவடியிலேயே தங்கள் ஓட்டை பதிவு செய்துக் கொள்ளும் வகையில் "தேர்தல் பணிச்சான்று' பயிற்சி வகுப்பின் போதே வழங்க தொகுதி தேர்தல் அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி, ராணுவத்தில் பணிபுரியும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 477 பேருக்கு தேர்தலுக்கு முன்பாகவே "சர்வீஸ்' ஓட்டு படிவங்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களில் பெரும்பாலானோருக்கு நேற்று முன்தினம் வரை தபால் ஒட்டு சென்றடையவில்லை.
லோக்சபா தேர்தலுக்காக மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 1,557 ஓட்டுச் சாவடிகளில் 8,000 அரசு ஊழியர்கள் பணியாற்றினர். இவர்களில், சொந்த லோக்சபா தொகுதிக்குள் பணி புரிபவர்கள், தாங்கள் பணியாற்றும் ஓட்டுச் சாவடியிலேயே, தங்கள் ஓட்டை பதிவு செய்து கொள்வதற்கு "தேர்தல் பணிச் சான்று' இறுதிக் கட்ட பயிற்சி வகுப்பின் போது பணி நியமன ஆணையுடன் சேர்த்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், இறுதிக் கட்ட பயிற்சி வகுப்பின் போது பணி நியமன ஆணை வழங்கிய அதிகாரிகள், "தேர்தல் பணிச் சான்று' தயாராகவில்லை. அதனால், தபால் ஓட்டு போட வசதி ஏற்படுத்தித் தருவதாகக் கூறி ஊழியர்களை ஓட்டுச் சாவடிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர்களுக்கு இதுவரை தபால் ஓட்டுகள் அனுப்பி வைக்கப்படவில்லை.
இதனால், மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களில் பெரும்பாலானோர் ஓட்டு போட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனை அறிந்த அரசியல் கட்சியினர், தங்களுக்குக் கிடைக்க வேண்டிய ஓட்டுகள் பறி போய் விட்டதே என புலம்பி வருகின்றனர்.

அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டு கிடைக்காத தகவலை அறிந்த கம்யூ., கட்சியினர் இதுகுறித்து கலெக்டர், கடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடி உதவி தேர்தல் அலுவலர்களை சந்தித்து முறையிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக