ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி ஊதியம் பெறாமல் இருந்தவர்களுக்கும் தற்போது அகவிலைப்படி 200 சதவீதம் உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2006ம் ஆண்டு ஊதியக்குழு அமைக்கப்பட்டது. 6வது ஊதியக்குழு அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலருக்கு உயர்த்தப்பட்ட ஊதியம், அகவிலைப்படி அளிக்கப்படுகிறது. ஊதியக்குழு பரிந்துரைத்தாலும், பணி இடை நீக்கம், ஒழுங்கு நடவடிக்கை, சொந்த பிரச்னை போன்ற பல்வேறு காரணங்களால் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதை பெற முடியவில்லை. எனவே அவர்கள் அனைவருமே 2006ம் ஆண்டுக்கு முந்தைய ஊதியம் மற்றும் அகவிலைப்படியைத்தான் பெறலாம்.
இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 90 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அகவிலைப்படி உயர்த்தி கடந்த 3ம் தேதி அறிவிக்கப்பட்டது, 6வது ஊதியக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஊதியம் பெறுபவர்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு பொருந்தியது. 2006ம் ஆண்டுக்கு முந்தைய ஊதியம் பெறுபவர்களுக்கு, கடந்த 3ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் கூறப்பட்ட அகவிலைப்படி உயர்வை பெற முடியாத நிலையில் இருந்தனர். அவர்களின் அகவிலைப்படி 183 சதவீதம் என்ற அளவிலேயே தொடர்ந்து நீடித்தபடி இருந்தது.
தற்போது அவர்களுக்கும், அகவிலைப்படியை 183 சதவீதத்தில் இருந்து 200 சதவீதமாக உயர்த்தி தனியாக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, கடந்த ஜனவரி 1ம் தேதியில் இருந்து முன் தேதியிட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக நிதித்துறை (செலவினம்) செயலாளர் த.உதயசந்திரன் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளார். அரசு மானியம் பெறும் கல்வி நிறுவன ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத அலுவலர்கள், உள்ளாட்சி மன்ற அலுவலர்கள், பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் ஊதிய விகிதங்களுக்கு கீழ்வரும் அலுவலர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசு மானியம் பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள், சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சமையல் உதவியாளர்கள், பஞ்சாயத்து உதவியாளர்கள், எழுத்தர்கள் ஆகியோருக்கு இந்த உத்தரவு பொருந்தும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக